மனம்

எண்ணத்தை மாற்றினால் வாழ்க்கை மாறும்

உங்கள் வாழ்க்கை மேன்மை அடைய வேண்டுமா? வாழ்க்கையில் நிம்மதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம், செல்வம், அனைத்தும் நிறைவாகப் பெற்று, சந்தோசமாக வாழ வேண்டுமா? எண்ணத்தை மாற்றுங்கள் வாழ்க்கை மாறும், எண்ணம் போல் வாழ்க்கை என்பது சான்றோர் வாக்கு. நம் மனதில் தோன்றும் எண்ணங்களின் அடிப்படையிலேயே நமது உடலும், மனமும், வாழ்க்கையும், அமைகின்றன.

நல்ல எண்ணங்கள் நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கை அமையவும், தீய எண்ணங்கள் நிம்மதியற்ற துன்பகரமான வாழ்க்கை அமையவும் காரணமாக இருக்கின்றன. நல்ல எண்ணங்கள் என்று கூறும்போது செயற்கையாக நல்ல விசயங்களை நினைத்துப் பார்ப்பது அல்ல. முதலில், எண்ணம் வேறு சிந்தனை வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாமாக ஒரு விசயத்தை நினைத்துப் பார்ப்பது சிந்தனையே ஒழிய எண்ணம் அல்ல. எண்ணம் என்பது நம் மனதில் ஏற்கனவே பதிந்திருக்கும் பதிவுகளின் அடிப்படையில் சுயமாகத் தோன்றுவது.

மனதின் பதிவுகள்

நமது ஐம்பொறிகள் பார்ப்பது, கேட்பது, நுகர்வது, சுவைப்பது, மற்றும் உணர்வதன் மூலமாக நம் மனதுக்குள் பதிவுகள் உருவாகின்றன. மனப்பதிவுகளின் அடிப்படையில் எண்ணங்கள் உருவாகின்றன. நல்ல எண்ணங்களே நல்ல வாழ்க்கை அமைவதற்குக் காரணமாக இருக்கின்றன, ஆனால் எண்ணங்களை செயற்கையாக உருவாக்க முடியாது.

நல்ல எண்ணங்கள் உருவாக வேண்டும் என்றால் மனதுக்குள் நல்ல பதிவுகள் இருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் நல்ல விசயங்களை விடவும், தீய விசயங்களே அனைவரையும் எளிதில் சென்றடைகின்றன. வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இணையம், தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை, நாளிதழ், போன்றவற்றின் மூலமாக அனுதினமும் தவறான விசயங்களும், நம் வாழ்க்கைக்கு எந்தப் பயனும் தராத தீய விசயங்களும் நம் மனதுக்குள் பதியப்படுகின்றன.

நல்லவர்களின் தொடர்பு

நம் மனதில் நல்ல பயனான பதிவுகள் உருவாக வேண்டும் என்றால், நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். நல்ல மனிதர்களுடன் உறவை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தீய மனிதர்களுடன் உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும்.

நல்லாரைக் காண்பதுவும் நன்றே;
நலம்மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே;
நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே;
அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று.

ஔவையார், மூதுரை

நல்ல மனிதர்களுடனான தொடர்பு மிகவும் பயனானது என்பதை இந்தப் பாடலின் மூலமாக ஒளவையார் நமக்கு உணர்த்துகிறார். அவர் பாடிய இந்தப் பாடலை எதிர்ப்பதமாக எடுத்துக்கொண்டால் தீய மனிதர்களுடன் எந்த வகையான தொடர்பு வைத்திருந்தாலும் அது நமக்குக் கெடுதலையே செய்யும் என்பது தெளிவாகும்.

எதிர்மறை எண்ணங்கள்

முடியாது, நடக்காது, கிடைக்காது, போன்றவற்றை எதிர்மறை வார்த்தைகள் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் நமது மனநிலையை பாதிக்கக்கூடிய அனைத்துமே எதிர்மறை வார்த்தைகள்தான். நம் மனதின் பதிவுகளைப் பாதிக்கக்கூடிய அல்லது தவறான பதிவுகளை உண்டாக்கக்கூடிய அனைத்துமே தீய விசயங்கள் தான். வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர், இணையம், தொலைக்காட்சி, வானொலி, வார இதழ், நாளிதழ், போன்றவற்றின் மூலமாக அனுதினமும் தவறான, கெட்ட விசயங்கள் நம்மை வந்தடைகின்றன.

நம் வாழ்க்கை மேன்மை அடைய வேண்டுமென்றால் நமது எண்ணங்கள் மாற வேண்டும். நம் எண்ணங்கள் மாற வேண்டுமென்றால் மனப் பதிவுகள் மாற வேண்டும். ஏற்கனவே மனதுக்குள் பதிந்துவிட்ட பழைய பதிவுகளை மாற்றுவது கடினம், ஆனால் புதிதாகப் பதியும் மனப் பதிவுகள் பயனுள்ளவையாக அமைந்துவிட்டால் மனதின் எண்ணங்கள் மாற தொடங்கும்; ஏற்கனவே உள்ள பழைய பதிவுகள் படிப்படியாகச் செயலிழந்துவிடும்.

எதிர்மறையான விசயங்களை ஒதுக்கிவிடுங்கள்

ஒரு பதிவை வாசித்து, பின்பு அது நன்மையானதா? தீமையானதா? அது நமக்கு எந்த வகையிலாவது பயனுள்ளதாக இருக்குமா? என்பதை ஆராய்வதை விடவும், பயனற்ற செய்திகளை வாசிக்காமல் விட்டு விடுவதே சிறந்ததாகும். முதலில், நீங்கள் எந்த தவறான மற்றும் எதிர்மறை விசயங்களையும் பகிராதீர்கள். தவறான பதிவுகளைப் பகிரும் நண்பர்களின் உறவைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். தவறான விசயங்களைப் பதியும், பரப்பும் வாட்ஸ்அப், பேஸ்புக் குழுக்களில் இருந்து வெளியேறி விடுங்கள். எதிர்மறை விசயங்களைக் காட்டும் மற்றும் பரப்பும் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை, நாளிதழ், இணையப்பக்கம் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

எவையெல்லாம் தவறான அல்லது எதிர்மறையான செய்திகள் மற்றும் விசயங்கள் என்றால், எவையெல்லாம் உங்கள் வாழ்க்கையில் நடக்கக் கூடாது என்று நீங்கள் விரும்புவீர்களோ அவை அனைத்துமே தீய விசயங்கள் தான். அவற்றைப் பரப்பும் மற்றும் நினைவுபடுத்தும் அத்தனை விசயங்களையும் விட்டு விலகியிருங்கள். உங்கள் வாழ்க்கை சிறப்பானதாக மாறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X