எங்கும் நிறைந்திருக்கும் பிரபஞ்ச பேராற்றல். பிரபஞ்ச ஆற்றல் என்பது ஏதோ ஒரு விசித்திரமான, அதிசயமான, நமக்குத் தொடர்பில்லாத ஆற்றலோ சக்தியோ அல்ல. இயற்கையின் அத்தனை படைப்புகளும், உயிரினங்களும், உயிரற்றவையும், பிரபஞ்ச ஆற்றலின் பரிமாணமாகவும் வடிவமாகவும் இருக்கின்றன. நீங்களும், நானும், மற்ற உயிரினங்களும், உருவாக காரணமாக இருந்த சக்தி அது.
பிரபஞ்ச ஆற்றலானது, தான் இயங்கும் இடத்துக்கும் நோக்கத்துக்கும் தக்கவாறு உருவமும், செயலும், தன்மையும், ஆற்றலும் அமையப்பெறுகிறது. இந்தக் கட்டுரையை எழுதும் நானும், இதை வாசிக்கும் நீங்களும், நீங்கள் வாசிக்க பயன்படுத்தும் கணினியும், கையடக்கத் தொலைப்பேசியும், பிரபஞ்ச ஆற்றலின் மாறுபட்ட உருவங்கள்தான்.
ஞானவள்ளல் பரஞ்சோதி மகான் அழகான ஒரு தத்துவத்தைக் குறிப்பிடுவார். “இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பாக இறைவனையன்றி எதுவுமே இல்லாதிருந்ததால், ஏதோ ஒன்றை எடுத்து இறைவன் அனைத்தையும் படைத்திருக்கிறான் என்பதல்ல. இறைவன் தன் சுயத்திலிருந்து அனைத்தையும் படைத்திருக்கிறான். அதனால் நாம் காணும் அனைத்தும் இறைவனின் மாறுபட்ட உருவங்களாக இருக்கின்றன” என்பார்.
அவர் கூறுவதைப் போன்று இந்த பூமியில் எந்த ஒரு படைப்பு உருவானாலும், அந்த படைப்பின் அடிப்படை, பிரபஞ்ச ஆற்றலாக இருப்பதினால், நாம் காணும் அனைத்தும் பிரபஞ்ச ஆற்றலின் மறு உருவமாகவே இருக்கின்றன. எளிமையாகச் சொல்வதானால் கண்ணுக்குத் தெரியாத ஆற்றல் கண்களால் காணக்கூடிய மனிதனாகவும், விலங்குகளாகவும், தாவரங்களாகவும், கருவிகளாகவும், பொருட்களாகவும் பரிமாணம் அடைந்திருக்கிறது.
டார்ச்லைட் வெளிச்சத்தின் மீது மனிதர்களின் கையை நெருக்கமாக காட்டினால், டார்ச்லைட் வெளிச்சம் கையின் மறுபக்கம் தெரியும். இதற்குக் காரணம் மனித உடலானது திடமான அமைப்பைக் கொண்ட உருவமல்ல, பல கோடி நுண்ணிய செல்களின் கோர்வைதான் மனித உடல்.
மனித உடலின் செல்கள் உருவாக அடிப்படை ஆதாரமாக இருந்தது பிரபஞ்ச ஆற்றல். அந்த அடிப்படை ஆற்றலைப் பற்றியும், அதனை பயன்படுத்தும் வழிமுறைகளைப் பற்றியும், அதனால் அடையக்கூடிய நன்மைகளைப் பற்றியும் புரிந்து மற்றும் உணர்ந்துக் கொள்வதுதான் ஹோலிஸ்டிக் ரெய்கி பயிற்சியாகும்.
Leave feedback about this