தியானம் என்பது என்ன?
தியானத்துக்கு ஒரு அறிமுகம். தியானம் என்பது உடல், மனம், புத்தி மற்றும் உடலின் ஆற்றலைச் சீராகவும், நம் கட்டுப் பாட்டுக்குள்ளும் வைத்திருக்க உதவும் ஒரு பயிற்சியாகும். தியானம் ஆன்மீக வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும், அதே நேரத்தில் இந்த உலக வாழ்க்கையை விழிப்புணர்வோடு வாழ்வதற்கும் தெளிவான முடிவுகளை எடுப்பதற்கும் பேருதவியாக இருக்கும்.
தியானம் என்பது மதம், தெய்வம், மற்றும் வழிபாடுகள், தொடர்புடையவை அல்ல. உண்மையில் தியானம் என்பது மனிதனின் இயல்பான நிலையாகும். தாயின் கருவறையில் இருக்கும் போது நாம் தியான நிலையில் தான் இருந்தோம். பூமியில் பிறந்த புதிதிலும் தியான நிலையில் தான் இருந்தோம், மனம் வளரத் தொடங்கியதும் நாம் படிப்படியாக தியான நிலையை விட்டு, மாயையில் சிக்கி உலக வாழ்க்கையில் நுழைந்தோம்.
மாயையிலிருந்து விடுபட்டு மீண்டும் நம் சுயத்தை உணர உதவும் வழிமுறைதான் தியானம். சற்று உன்னிப்பாகக் கவனித்தால் தியானம் எல்லா மதத்திலும் நம்பிக்கையிலும் வெவ்வேறு வடிவங்களில் இருப்பது புரியும். தியானம் பல வழிமுறைகளில் பயிற்சி செய்யப்பட்டு வருகிறது. சிலர் தியானத்தை மட்டுமே தனியாகவும், சிலர் மற்ற சில பயிற்சிகளுடன் இணைத்தும் செய்கிறார்கள். பல்வேறு வழிமுறைகளில் பயிற்சி செய்யப்பட்டாலும் தியானத்தின் நோக்கம் என்பது உடல், மனம், புத்தி மற்றும் உடலின் ஆற்றலைக் கட்டுப்படுத்துவதும், சீராக வைத்திருப்பதும் மட்டுமே.
மூச்சுப் பயிற்சி
மூச்சுப் பயிற்சி உடலையும், மனதையும், ஆற்றலையும் கட்டுப்படுத்த மிகவும் அவசியமானது. மூச்சுப் பயிற்சி என்பது மூச்சுக் காற்றை கட்டுப்படுத்தும் பயிற்சியல்ல மாறாக மூச்சுக் காற்றை சீர்படுத்தும் பயிற்சி மட்டுமே. சுவாசத்தின் போது உள்ளே செல்லும் மூச்சையும் வெளியேறும் மூச்சையும் கவனிப்பது மனதையும் உடலின் ஆற்றலையும் சமப்படுத்தும். உடலும் மனமும் இணைந்து செயல்பட உதவும். சமநிலையில் இருக்கும் மனமும் ஆற்றலும் சுலபமாகவும் முழுமையாகவும் தியானத்தில் இருக்க உதவும்.
Leave feedback about this