தியானம்

தியானம் முறையாக பலனளிக்கிறதா?

நீங்கள் செய்யும் தியானம் முறையாக பலனளிக்கிறதா? தியானம் என்பது ஒரு செயல் அல்ல, அது ஒரு நிலை. தியானத்தை யாராலும் செய்ய முடியாது, அது சுயமாக நடைபெறும் ஒரு நிகழ்வு. தியானப் பயிற்சிகள் என்று நாம் சொல்வதெல்லாம் தியானம் நடைபெறக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித் தருவதைத்தான்.

நாம் செய்யும் தியானப் பயிற்சி நமக்குப் பலனளிக்கிறதா என்பதை எவ்வாறு அறிந்துக் கொள்வது? தியானத்தில் வளர்ச்சி என்பது மனதின் பக்குவ நிலைதான். தியானத்தை நோக்கி நாம் செல்வது, நம் சுயத்தை நோக்கிச் செல்வதற்குச் சமம். தியானப் பயிற்சிகளைச் செய்யும்போது ஏற்படும் மாற்றங்களை வைத்து நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை உணர்ந்துக் கொள்ளலாம். எந்த நிலையில் இருந்தாலும் தியானம் செய்வதை மட்டும் நிறுத்தாதீர்கள். தியானம் செய்யும் பழக்கம் இல்லாதவர்கள் தியானம் செய்யத் தொடங்குங்கள்.

தியானம் செய்யத் தொடங்கியதும் மிகவும் ஒழுக்கமாக, முறையாக செய்வார்கள். அப்போது தவறாக செய்கிறார்கள் என்று அர்த்தம். பழகிக் கொண்டிருக்கிறார்கள்.

சில மாதங்களுக்குப் பிறகு நாம் செய்வது தியானம்தானா? சரியாக செய்கிறோமா? என்று சந்தேகங்கள் உண்டாகும். அப்போதுதான் சரியாக செய்ய கற்றுக் கொண்டுள்ளார்கள் என்று அர்த்தம்.

சில வருடங்களுக்குப் பிறகு, தியானம் செய்வது எல்லாம் வீண் வேலை. தியானம் செய்யத் தேவையில்லை என்று தோன்றும். அப்போதுதான் அவர்களுக்குள் தியானம் நடக்கத் தொடங்கியுள்ளது என்று அர்த்தம்.

சில வருடங்களுக்குப் பிறகு, தனக்குத் தானே முட்டாளைப் போலவும். தான் நம்புவதெல்லாம் தவறானவை போலவும், வீண் வேலைகளை செய்வது போலவும் தோன்றும். அப்போதுதான் தியானம் அவருக்கு பலன் அளிக்கத் தொடங்கியுள்ளது என்று அர்த்தம்.

தியானம் செய்யத் தொடங்கிய போது அனைத்துமே சரியாக நடந்தால். அகக் காட்சிகள், ஓசைகள், தெய்வப் பக்தி, குரு பக்தி போன்றவை அதிகரித்தால், அவர் மாயையில் சிக்கியுள்ளார் என்று அர்த்தம்.

இவை அனைத்தையும் தாண்டி பொறுமையாக தொடர்ந்து தியானத்தை மேற்கொள்பவர்கள் மட்டுமே ஆன்மீகத்தில் வெற்றி பெறுவார்கள். ஒரு கால கட்டத்தில் தியான நிலைக்குள் அடியெடுத்து வைக்கும் போது, தொடக்கத்திலிருந்து செய்தவை, பார்த்தவை, அனுபவித்தவை பற்றிய விளக்கம் கிடைக்கும்.

பொறுமையாக சும்மா இருங்கள்.

Reiki Master, Healer, Acupuncturist, Writer, Thinker, Speaker, Author.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X