தியானம்

தியான நிலை என்பது என்ன?

தியான நிலை என்பது என்ன? தியானத்தில் இருக்கும் போது, பல வகையான உணர்வுகளை தியானம் செய்பவர்கள் அனுபவிப்பார்கள். அந்த அனுபவங்களைத் தான் தியான நிலை என்று பலர் எண்ணுகிறார்கள். நானும் தியானத்தின் போது பலவகையான அனுபவங்களை அனுபவித்திருக்கிறேன். அந்த அனுபவங்களைக் கொண்டு நான் எதையோ சாதித்து விட்டேன், நான் எதையோ அடைந்துவிட்டேன் என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். பின்புதான் உணர்ந்து கொண்டேன் என் அனுபவங்கள் அனைத்தும் என் மனதினால் உருவாக்கப்பட்ட கற்பனைகள் என்று. தியான நிலையை விளக்கும் அளவுக்கு எனக்குத் தெளிவு கிடையாது ஆனாலும் நான் உணர்ந்து கொண்டவற்றை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

தியானத்தின் போது தியானம் செய்பவர்கள் அனுபவிக்கும், எண்ணங்கள், உணர்வுகள், அவர்கள் செவிமடுக்கும் ஓசைகள், காணும் காட்சிகள் அனைத்தும் அவர்களின் கற்பனைகள் மட்டுமே. அவை எதுவும் உண்மை கிடையாது. அதனால் தியானத்தில் கிடைக்கும் உணர்வுகள், எண்ணங்கள், மற்றும் காட்சிகளைக் கண்டு மகிழ்ச்சி அடையவும் தேவையில்லை, பயப்படவும் தேவையில்லை. தியானத்தின் போது தெய்வத்தைக் கண்டாலும் பேயைக் கண்டாலும் இரண்டுமே கற்பனைதான், அதனால் மகிழ்ச்சியோ பயமோ இரண்டுமே தேவையில்லை.

தியானம் என்பதே எண்ணங்கள் அற்ற நிலைக்குச் செல்லும் ஒரு வழிமுறைதான். எண்ணங்களின் குவியலான மனமானது செயல்படாமல், புதிய எண்ணங்கள் உருவாகாமல், நாம் நம்மோடு தனித்திருக்கும் நிலைதான் தியானம். அந்த தியான நிலையில் நாம் மட்டுமே இருக்க வேண்டும், நம்மைத் தவிர நம்முடன் எது இருந்தாலும் அது நமது கற்பனையே. உண்மையான தியான நிலை எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துக் கொள்வதற்காக சில எடுத்துக்காட்டுகளைச் சொல்கிறேன்.

ஒரு ரயில் பெரும் இரைச்சலோடு நம்மைக் கடந்து சென்ற பிறகு ஒரு அமைதி உருவாகுமே அந்த அமைதிதான் தியானநிலை. சினிமாவிலோ, கூட்டத்திலோ, சாலையிலோ, இருக்கும் போது, இரைச்சலான சத்தங்கள் உருவாகி, பின்னர் அந்த சத்தங்கள் ஓயும்போது ஓர் அமைதி நிலவுமே அதுதான் தியானநிலை. அந்த அமைதிதான், அந்த சூழ்நிலைதான் மனிதனின் உண்மையான சுயநிலை. அந்த அமைதியை அடைவதுதான் தியானப் பயிற்சிகளின் நோக்கம். அந்த அமைதியில் நிலைத்திருப்பது தான் சமாதி நிலை. சம + ஆதி, அதாவது ஆதி பரம்பொருளுடன் நிலைத்திருக்கும் நிலை.

தியானம் செய்யத் தொடங்குபவர்கள், தொடக்கத்தில் நீண்ட நேரம் தியானம் செய்யத் தேவையில்லை. ஒரு நாளைக்கு ஒரு நிமிடம் இந்த அமைதி நிலையை அடைந்து விடுங்கள் அது போதும். இந்த அமைதி நிலையை அடைவதற்கு சில காலப் பயிற்சி தேவைப்படலாம். ஆனால் இந்த அமைதி நிலையை, தியான நிலையை அடைவதற்கு எந்த முயற்சியும் செய்யாதீர்கள், செய்யவும் தேவையில்லை. அமைதியாக அமர்ந்து மூச்சை கவனிக்க தொடங்குங்கள், மற்றவை சுயமாகவே நடக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X