நோய்களும் மனப் பாதிப்புகளும். ஒருவர் நோய்வாய்ப் பட்டுவிட்டால் வைத்தியர் (மருத்துவர்) அவரை பரிசோதித்து, அவரின் உபாதைகளை அறிந்துகொண்டு, உடல் காட்டும் அறிகுறிகளை புரிந்துக்கொண்டு நோயாளியின் உண்மையான நோயைக் கண்டறிய வேண்டும். அந்த நோய் உடலுடன் தொடர்புடையதா? மனதுடன் தொடர்புடையதா? என்பதைக் கண்டறிய வேண்டும். நோயின் மூல காரணத்தை அறிந்து கொண்ட பிறகுதான் மருத்துவம் செய்யத் தொடங்க வேண்டும்.
மன நிம்மதி
உடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மன நிம்மதியும், மன அமைதியும் மிகவும் அவசியமானது. மனிதர்களின் பெரும்பாலான நோய்கள் மனதில் உண்டாகும் மாறுபாட்டாலேயே உருவாகின்றன.
உதாரணம் 1:
ஒரு குழந்தையை மிரட்டினால் அல்லது பயமுறுத்தினால் அந்த குழந்தை பயத்தில் சிறுநீர் கழித்துவிடுகிறது. அந்த குழந்தையின் உடலில் என்ன நடந்தது? ஏன் அந்த குழந்தை சிறுநீர் கழித்தது? உண்மையில் என்ன நடந்தது என்றால். அந்த குழந்தையின் மனதில் உண்டான அதிகப்படியான பயம் மனதின் சமநிலையைப் பாதித்து. அந்த பாதிப்பு சிறுநீர்ப் பையைப் பாதித்து சிறுநீர் சுயமாக வெளியேறக் காரணமாகிறது.
மனதில் உண்டாகும் பயமானது சிறுநீரகங்கள், சிறுநீர் பை, கர்ப்பப்பை, ஆண்மை மற்றும் உடலின் பல உறுப்புகளைப் பாதிக்கக் கூடியது. அதிகப்படியான பய உணர்வு உள்ளவர்களுக்கு மேலே குறிப்பிட்ட உறுப்புகளில் சில தொந்தரவுகள் உருவாகக் கூடும். அச்ச உணர்வுகளை நீக்கி விட்டால் அந்த பாதிப்புகள் நீங்கிவிடும்.
மனதில் உண்டான பாதிப்பைப் புரிந்துகொள்ளாமல், அந்த குழந்தைக்கு சிறுநீர்ப் பையில் அல்லது சிறுநீரகத்தில் பாதிப்பு உருவாகியிருக்கும் என்று எண்ணி வைத்தியம் செய்தால் என்ன ஆகும் என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.
உதாரணம் 2:
ஒரு வீட்டில் துக்ககரமான நிகழ்வு நடந்துவிட்டால் அந்த வீட்டைச் சார்ந்தவர்களுக்கு பசி உணர்வு உண்டாவதில்லை. மரணம் நடந்த வீட்டில் இதைக் கண்கூடாக அனைவரும் காணலாம். நாள் முழுதும் சாப்பிடாவிட்டாலும், அதன் குடும்ப உறுப்பினர்களுக்கு பசி என்ற உணர்வு உண்டாவதில்லை. கவலையுடன் இருக்கும் மனிதர்கள் கூட எனக்குப் பசியில்லை உணவு வேண்டாம் என்பார்கள்.
இவ்வாறான சூழ்நிலைகளில் என்ன நடக்கிறது என்றால் துக்கம், சோகம், கவலை போன்ற உணர்வுகள் வயிற்றைப் பாதிக்கின்றன. வயிறு பாதிப்புக்கு உள்ளானதால், அது உணவைச் சீரணிக்கும் தன்மையில் இருக்காது, அதனால் அவர்களுக்கு பசி உண்டாகாது, உணவை உட்கொள்ளும் விருப்பமும் இருக்காது.
மனதின் அமைதியும் சமத் தன்மையும் உடலின் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமானவை. அதனால் யாருக்காவது உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தால் உடலை மட்டுமே சோதிக்காமல் நோயாளியுடன் உரையாடி அவருக்கு மனம் தொடர்பான பாதிப்புகள் ஏதாவது இருக்கின்றனவா என்பதையும் அறிந்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை மனப் பாதிப்புகள் இருந்தால் அதனை முதலில் களைய வேண்டும்
Leave feedback about this