தியானம்
தியானம் மற்றும் மூச்சு பயிற்சிகள். தியானம் மற்றும் தியான நிலை என்பது மனிதர்களின் இயல்பான குணங்களாகும். மனதில் கோபம், குழப்பம், பயம், விரக்தி, போன்ற உணர்வுகள் தோன்றும் போது எந்த செயலும் செய்யாமல் அமைதியாக ஓர் இடத்தில் அமர்கிறோம் அல்லவா? அதுதான் தியானம்.
தியானம் என்பது உடல், மனம் மற்றும் ஆற்றலைக் கட்டுப்படுத்த மற்றும் சீராக வைத்திருக்க உதவும் பயிற்சியாகும். இது ஆன்மீக வளர்ச்சிக்கும் மனதைப் பக்குவப்படுத்தவும் மிகவும் உறுதுணையாக இருக்கும். தியானம் என்பது எந்த மதத்துக்கும், நம்பிக்கைக்கும் தொடர்பு இல்லாதது. சற்று உன்னிப்பாக கவனித்தால் எல்லா மதத்திலும் நம்பிக்கையிலும் தியானப் பயிற்சிகள் வெவ்வேறு வடிவங்களில் இருப்பது புரியவரும்.
சிலர் தியானத்தை மட்டுமே தனியாகவும், சிலர் மற்ற சில பயிற்சிகளுடன் இணைத்தும் செய்கிறார்கள். பல்வேறு வழிமுறைகளில் பயிற்சி செய்யப்பட்டாலும், தியானத்தின் நோக்கம் என்பது உடல், மனம் மற்றும் ஆற்றலைக் கட்டுப்படுத்துவதும் அவற்றைச் சீராக வைத்திருப்பதும் மட்டுமே.
மூச்சுப் பயிற்சி
மூச்சுப் பயிற்சி உடலையும், மனதையும், ஆற்றலையும் கட்டுப்படுத்த மிகவும் அவசியமானது. மூச்சுப் பயிற்சி என்பது மூச்சுக் காற்றைக் கட்டுப்படுத்தும் பயிற்சியல்ல மாறாக சுவாசத்தைச் சீர்படுத்தும் பயிற்சியாகும். சுவாசத்தின் போது உள்ளே செல்லும் மூச்சையும், வெளியேறும் மூச்சையும் கவனிப்பது மனதையும் உடலின் ஆற்றலையும் சாந்தப்படுத்தும். உடலும் மனமும் இணைந்து செயல்பட உதவும். சமநிலையில் இயங்கும் மனமும் ஆற்றலும் சுலபமாகவும் முழுமையாகவும் தியான நிலையில் லயிக்க உதவும்.