கிரிப்டோ கரன்சி என்றால் என்ன? முந்தைய காலத்தில் வியாபாரங்கள் பண்டமாற்று முறையில் நடைபெற்றன. ஒரு மனிதர் தன்னிடம் இருக்கும் பொருளை அடுத்த மனிதரிடம் கொடுத்துவிட்டு அதற்கு மாற்றாக மற்றவரிடம் இருக்கும் பொருளைப் பெற்றுக் கொண்டார். மக்களின் தேவைகள் அதிகரிக்கவே, கால ஓட்டத்தில் மக்கள் ஒரே இடத்தில் கூடி தங்களுக்குத் தேவையான பொருட்களை மாற்றிக் கொள்ளக் கூடிய சந்தைகள் உருவாகின.
சந்தைகளின் மூலமாக மனிதர்களுக்கு தேர்ந்தெடுக்கக் கூடிய வாய்ப்புகள் அமைந்தன. தனக்குத் தேவையான சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும் தன்னிடம் இருக்கும் பொருளுக்கு சரியான மாற்றுப் பொருளை பெற்றுக் கொள்ளவும் அதிகமான வாய்ப்புகள் உற்பத்தியாளர்களுக்கும் பயனீட்டாளர்களுக்கும் கிடைத்தன.
உற்பத்தியாளர் தனது பொருளை சந்தைக்குக் கொண்டு சென்று தனக்குத் தேவையான பொருளையும், பொருளின் அளவையும், பொருளின் தரத்தையும் தானே நிர்ணயித்து; அதற்கு ஏற்ற நபரிடம் மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் உற்பத்தியாளர் தான் உற்பத்தி செய்த பொருளுக்கு தானே மதிப்பை நிர்ணயம் செய்தார்.
கால ஓட்டத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான மதிப்பை தங்கம் மற்றும் வெள்ளியைக் கொண்டு நிர்ணயித்தார்கள். தொடர் கால ஓட்டத்தில், காசு மற்றும் பணம் என்ற பரிவர்த்தனை பொருட்கள் அறிமுகமாகின. பணம், நிறுவன மயமாகி, வங்கி மயமாகி, மின்னியல் மயமாகி, காலத்தின் கட்டாயமாக தற்போது கிரிப்டோ நாணயங்கள் அறிமுகமாகி உள்ளன. பணம், காசு, காசோலை, கடன் அட்டை, மின் பரிவர்த்தனை அட்டை, மின்னியல் பணமாற்று முறைகளைப் போன்று கிரிப்டோ நாணயங்களும் ஒருவகையான பணப்பரிவர்த்தனை முறையே.
வங்கிகளும் நவீன அரசாங்கங்களும் உருவான பிறகு பணப் பரிவர்த்தனைகள் கட்டுப்படுத்தப்பட்டன. பணத்தை அனுப்பவும், பெற்றுக் கொள்ளவும், சேவைக் கட்டணங்கள் விதிக்கப்பட்டன. பணத்தை இந்த நாட்டுக்கு அனுப்பலாம், இந்த நாட்டுக்கு அனுப்பக் கூடாது, இப்படித்தான் அனுப்ப வேண்டும், இந்த நிறுவனத்தின் மூலமாகத் தான் அனுப்ப வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இவற்றின் மூலமாக அரசாங்கங்களும் வங்கிகளும் பணத்தைப் பயன்படுத்தும் மற்றும் பரிமாற்றம் செய்துகொள்ளும் நபர்களிடமிருந்து பல வகைகளில் லாபம் சம்பாதித்தன.
வங்கிகளின் தலையீடு இல்லாமல் பணத்தை அனுப்பவோ பெறவோ முடியாது, கட்டணத்தைச் செலுத்தவோ பெறவோ முடியாது என்ற நிலை உருவான பிறகுதான் முதன் முதலில் பிட்காயின் (bitcoin) என்ற கிரிப்டோ நாணயம் அறிமுகமானது. பிளாக்செயின் தொழில்நுட்பத்தை (blockchain technology) பயன்படுத்தி, இடைத் தரகர்கள் இல்லாத நேரடிப் பரிமாற்ற முறையில் (peer to peer network) பிட்காயின் வடிவமைக்கப்பட்டது. பிட்காயினின் வெற்றியைத் தொடர்ந்து பல கிரிப்டோ நாணயங்கள் தொடர்ச்சியாக அறிமுகமாகின.
கிரிப்டோ நாணயங்களைப் பயன்படுத்தி எல்லையில்லாமல் எந்த நாட்டில் இருக்கும் நபருக்கும் பணம் அனுப்பலாம், பெறலாம், பொருட்கள் வாங்கலாம், முதலீடாக அல்லது சொத்தாக சேமிக்கலாம். அவற்றைப் பயன்படுத்த கட்டுப்பாடுகளோ எல்லைகளோ கிடையாது. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எந்த ஒரு இடைத்தரகரும் இல்லாமல் கிரிப்டோ வாலெட் மூலமாக பணம் அனுப்பலாம் பெறலாம். இவைதான் கிரிப்டோ நாணயங்களின் சிறப்புகள்.