பொருளாதாரம்

கிரிப்டோ நாணயங்களின் விலைகள் எவ்வாறு மாறுகின்றன

A Hand Holding a Cellphone with Cryptograph

கிரிப்டோ நாணயங்களின் விலைகள் எவ்வாறு மாறுகின்றன. வங்கிகளில் பரிவர்த்தனை செய்யப்படும் அரசாங்கங்களால் வெளியிடப்பட்ட நாணயங்களை விடவும் கிரிப்டோ நாணயங்களின் விலை தினசரி மாறிக்கொண்டே இருக்கும். அதாவது மலேசிய ரிங்கிட், சிங்கப்பூர் டாலர், இந்திய ரூபாய், ஜப்பான் யென், போன்ற நாடுகள் வெளியிடும் நாணயங்களை விடவும் கிரிப்டோ நாணயங்களின் விலை சில நாட்களிலேயே பல மடங்காக உயர்ந்துவிடக் கூடும் அல்லது திடீரென்று சில மணித் துளிகளில் அவற்றின் மதிப்பு பாதியாகக் குறைந்துவிடக் கூடும்.

தற்போது நாம் தினசரி பரிவர்த்தனைகளில் பயன்படுத்தும் பணமானது அரசாங்கங்களால் வெளியிடப்படுகிறது. நம்மிடம் இருக்கும் பணத்துக்கு அதை வெளியிட்ட அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கிறது. ஒவ்வொரு நாட்டின் பணத்திலும் அந்த நாட்டு வங்கி கவர்னர் “இந்த பணத்திற்கு உரிய மதிப்புக்கு நான் உத்தரவாதம்” என்று கையொப்பம் இட்டு இருப்பார்.

ஒவ்வொரு நாட்டிலும், ஆளுகின்ற அரசாங்கம், உள்நாட்டு உற்பத்தி, தொழில்துறை, பங்குச் சந்தை, வேலை வாய்ப்பு, நிதிநிலை அறிக்கை, வங்கியின் வட்டி விகிதம், அரசியல் நிலைத்தன்மை, என்று பலவகையான விசயங்களைக் கணக்கில் கொண்டு அந்த நாட்டு நாணயத்தின் மதிப்பு அதிகரிக்கும் அல்லது குறையும்.

ஆனால் கிரிப்டோ நாணயங்கள் தனிநபர்களால் தனியார் நிறுவனங்களாலும் வெளியிடப்படுகின்றன. கிரிப்டோ நாணயத்தை வெளியிட்ட எண்ணிக்கை, அதன் பாதுகாப்பு, நாணயத்தின் நிதி இருப்பு, அந்த நாணயத்தை மக்கள் வாங்கும் விற்கும் அளவு, அதன் பரந்த பயன்பாட்டு முறை மற்றும் மக்கள் மத்தியில் அதற்குக் கிடைத்த வரவேற்புக்கு ஏற்ப அதன் விலை ஏறவும் இறங்கவும் செய்கிறது.

கிரிப்டோ நாணயங்களின் சிறப்பே இந்த ஏற்ற இறக்கம் தான், இந்த ஏற்ற இறக்கங்களை சரியாகக் கணிக்கக் கூடியவர்கள், விரைவாக தனது கிரிப்டோ கரன்சி கையிருப்பை பல மடங்காக உயர்த்திக் கொள்ள முடியும்.

அதாவது விலை உயர்ந்த நாணயத்தை வைத்திருப்பவர், விலை குறைந்த நாணயத்துக்கு மாற்றிக்கொள்ளும் போது அவருக்குக் குறைந்த விலையில் அதிக நாணயங்கள் கிடைக்கும். அவர் வாங்கிய விலை குறைந்த நாணயத்தின் விலை மீண்டும் உயரும் போது அவருக்கு மேலும் ஒரு லாபம் கிடைக்கும்.

உதாரணத்துக்கு: ஒருவர் $100 மதிப்புடைய நாணயத்தை வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். $1 மதிப்புடைய மற்ற நாணயத்தின் விலை குறையும் போது அவர் வைத்திருக்கும் நாணயத்தை விலை குறையும் நாணயமாக மாற்றிக் கொள்ளலாம்.

$1 மதிப்பில் வாங்கிய நாணயத்தின் மதிப்பு $1.20ஆக உயரும் போது அவருக்கு 20% லாபம் கிடைக்கும். இந்தப் பரிவர்த்தனையை மீண்டும் மீண்டும் செய்யும் போது அதிக லாபம் சம்பாதிக்கலாம். ஆனால் அந்த $1 நாணயத்தின் மதிப்பு மறுநாள் $0.80 காசாகவும் குறையலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கிரிப்டோ நாணயம் நிலையான விலை இல்லாதது; எப்போது வேண்டுமானாலும் அவற்றின் விலை உயரலாம் குறையலாம்.

எச்சரிக்கை: கிரிப்டோ நாணயங்களில் முதலீடு செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கிரிப்டோ நாணயங்கள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமாகவும், லாபகரமாகவும் தெரியும், எச்சரிக்கையாக இருக்காவிட்டால் பொருளாதார நஷ்டத்தை உண்டாக்கி விடக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X