கிரிப்டோ நாணயங்களை வாங்குவதால் என்ன பயன்? கிரிப்டோ நாணயங்கள் மிகவும் அவசியம் என்றோ, கிரிப்டோ நாணயங்கள் உலகத்தையே மாற்றப் போகின்றன என்றோ நான் கூற வரவில்லை. கிரிப்டோ நாணயங்கள் விரைவாக விலை அதிகரிக்கவும் குறையவும் கூடிய தன்மையில் இருப்பதனால், சரியாக நிர்வாகம் செய்யக் கூடியவர்களுக்கு அவை நல்ல இலாபத்தைத் தரக்கூடும் என்பது மட்டுமே எனது கருத்தாகும்.
பிட்காயினுக்கு அடுத்ததாக அறிமுகமானது இதெரியம் (Ethereum), தற்போது வெளியிடப்படும் பெரும்பாலான கிரிப்டோ நாணயங்கள் இதெரியத்தை அடிப்படையாகக் கொண்டு தான் வெளியிடப்படுகின்றன. அவற்றை இதெரியத்தின் குட்டிகள் என்றும் கூறலாம்.
தற்போது வெளியிடப்படும் பல கிரிப்டோ நாணயங்கள் இதெரியத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படுவதால் அவற்றைத் தைரியமாக வாங்கலாம். ஆனாலும் அவற்றின் விலை அதிகரிக்காமல் போகவும், அல்லது தற்போதைய சந்தை விலையை விட இன்னும் குறையவும் சாத்திய கூறுகள் இருப்பதை மறுக்க முடியாது. அதனால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தரமான கிரிப்டோ நாணயங்கள் சில மாதங்களில் பல முறை விலையேற்றம் காண்கின்றன. சரியான கிரிப்டோ காயினை இனம்கண்டு, சரியான தரமான எக்ஸ்சேஞ்ச் மூலமாக, கிரிப்டோ நாணயங்களை வாங்கினால் ஒரு சில வாரங்களில் லாபத்தைப் பார்க்கலாம். சரியான நாணயத்தை வாங்கினீர்கள் என்றால் ஒரு ஆண்டுக்குள்ளாகவே உங்களின் முதலீடு இருமடங்காகக் கூடும்.
சரியான நாணயம், சரியான எக்ஸ்சேஞ்ச் என்று நான் கூறுவது, தரமான அடிப்படையும், தரமான முதலீடும், தரமான கட்டமைப்பும், தரமான நிர்வாகக் குழுவும் கொண்டவைகளை தான். தரமான மற்றும் சரியான நாணயங்களுக்கு மட்டுமே விலை அதிகரிக்கும் சாத்திய கூறுகள் உள்ளன. அவற்றை மட்டுமே விலை அதிகரித்த பிறகு விற்பனை செய்து உண்மையான பணமாக மாற்றிக் கொள்ளவும் முடியும்.
Crypto.com, Coinbase, Binance, Luno, என்று பல கிரிப்டோ கரன்சி எக்ஸ்சேஞ்களில் டிரேடிங் செய்துவிட்டேன். தற்போது பைனன்ஸ் எக்ஸ்சேஞ்சில் அமெரிக்கா டாலரிலும், லூனோ எக்ஸ்சேஞ்சில் மலேசியா வெள்ளியிலும், வஜிர்எக்ஸ் எக்ஸ்சேஞ்சில் இந்திய ரூபாயில் டிரேடிங் செய்துக் கொண்டிருக்கிறேன். எதிலும் நான் நஷ்டம் அடையவில்லை.
தொடக்கக் காலத்தில் கிரிப்டோ நாணயம் என்றால் என்ன? எக்ஸ்சேஞ்கள் எவ்வாறு செயல்படுகின்றன? அவற்றின் சேவைக் கட்டணங்கள் என்ன? என்பனவற்றை அறிந்துகொள்ளாமல் பண விரயம் செய்திருக்கிறேன் என்றாலும் இறுதியில் கணக்கு பார்த்தால் ஆறு மாதங்களில் எனது முதலீடுகள் இரட்டிப்பாகி உள்ளன.
டிரேடிங் செய்வதற்கான ஆர்வமும், பொறுமையும், நிதானமும்; கிரிப்டோ பற்றி அறிந்துகொள்ள வாசிக்கும் மற்றும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு நிச்சயமாக கிரிப்டோ டிரேடிங் வெற்றியைத் தரும். மேலே உள்ள குணமுடையவர்கள் முயற்சி செய்துபார்க்கலாம்.
Leave feedback about this