சினிமாவினால் மனதில் உண்டாகும் தாக்கங்கள். சினிமாவில் எந்த நடிகரும் பெற்றிராத இடத்தை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுவிட்டார்; இளைஞர்களுக்கு இடையில் எந்த நடிகரும் பெற்றிராத செல்வாக்கை நடிகர் விஜய்யும் அஜீத்தும் பெற்று விட்டார்கள்; வயது பேதமின்றி அனைத்து வகையான ரசிகர்களுக்கும் நடிகர் வடிவேலுவை பிடித்திருக்கிறது; சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே நகைச்சுவை நடிகர்களை விரும்புகிறார்கள்; இவற்றுக்குக் காரணம் என்ன.
பொதுவாகவே மனிதர்களின் மனதில் பூர்த்தியாகாத ஆசைகள் அல்லது செய்ய விரும்பும் விசயங்கள் என்று சில இருக்கும். இவர்கள் செய்ய விரும்பும் விசயங்களை பெரிய திரையில் ஒரு நடிகர் செய்வதைப்போல் காட்டும்போது இவர்கள் தன்னை அறியாமலேயே அந்த நடிகரின் மீது ஈர்ப்பு கொள்கிறார்கள், அவருக்கு ரசிகராக மாறுகிறார்கள்.
இளைஞர்களுக்கு என்று சில ஆசைகள் இருக்கும், காதலிக்க வேண்டும், நடனமாட வேண்டும், பாட்டுப் பாட வேண்டும், பைக்கில் ஊர் சுற்ற வேண்டும், நண்பர்களுடன் அரட்டை அடிக்க வேண்டும், அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்க்க வேண்டும், இப்படி பல ஆசைகள் இருக்கும். இவர்களின் மனதில் ஆசையாக மட்டுமே இருக்கும் சில விசயங்களை திரையில் ஒரு நடிகர் செய்து கட்டும் போது அவரின் மீது இவர்கள் ஈர்ப்பு கொள்கிறார்கள்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரின் மனமும் அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் ஏங்கிக் கொண்டிருப்பதால், அவர்களை மகிழ்ச்சிப்படுத்த கூடிய நகைச்சுவை நடிகர்களை அனைவரும் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள், நேசிக்கிறார்கள்.
அனைவர் மனதிலும் சில விசயங்களைச் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் அவர்களால் அதை மரணம் வரையில் கூட செய்ய முடிவதில்லை. இதுபோன்ற ஆசைகளை மனமானது சினிமாவின் மூலமாக நிறைவேற்றிக் கொள்கிறது. மனிதர்களை அடிப்பது மிதிப்பது துன்புறுத்துவது கொலை செய்வது போன்றவற்றை செய்ய வாய்ப்பில்லாமல் சினிமாவில் பார்த்து திருப்தி அடைகிறார்கள்.
உதாரணத்திற்கு, ஒருவர் வட்டிக்குப் பணம் வாங்கிவிட்டு கந்து வட்டிக்காரரிடம் சிக்கித் தவிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். சினிமாவில் கதாநாயகன் கந்து வட்டிக்காரர்களை அடித்து துவைக்கும் காட்சிகளைப் பார்க்கும்போது இவர் மனம் பூரிப்படைகிறது அமைதி அடைகிறது.
ஒருவருக்கு துரோகம் இழைக்கப்பட்டு அதன் வடுக்கள் அவர் மனதில் பதிந்து இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். சினிமாவில் துரோகம் செய்த ஒருவரை கதாநாயகன் அடித்துக் கொலை செய்வது போன்று காட்சி அமைக்கப்பட்டால் இந்த பாதிக்கப்பட்டவரின் மனம் அதைப் பார்த்து திருப்தி அடைந்து, அந்த கொலையை தானே செய்ததை போன்று பூரிப்பு அடைகிறது.
சினிமாவில் ஒவ்வொரு திரைக்கதையும் காட்சியமைப்பும் ரசிகர்களின் மனதைத் திருப்திப்படுத்தும் நோக்கத்துடனே அமைக்கப்படுகிறது. பெரிய நடிகரும் கதைக்களமும் இல்லாத ஒரு சினிமா பெரும் வெற்றி அடைவதற்கும், நல்ல கதை, இயக்குனர், திரைக்கதை, இருந்தும் சில படங்கள் தோல்வி அடைவதற்கும் ரசிகர்களின் மனம் தான் காரணமாக இருக்கிறது. என்னதான் அருமையான திரைக்கதையாக இருந்தாலும், பெரிய நடிகர் நடித்திருந்தாலும், பெரிய இயக்குனர் இயக்கி இருந்தாலும், ரசிகர்களின் மனதைத் திருப்திப்படுத்தக் கூடிய விசயங்கள் எதுவும் அந்தத் திரைப்படத்தில் இல்லை என்றால் அந்த படம் வெற்றிபெறாது.
உதாரணத்திற்கு நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்த சில படங்களைக் கூறலாம், ஹேராம், அன்பே சிவம், குருதிப்புனல், போன்ற அருமையான திரைப்படங்கள் கூட வெற்றி பெறாததற்குக் காரணம் ரசிகர்களின் மனதில் இந்த மூன்று திரைப்படங்களில் வரும் கதாநாயகன் போன்ற ஒரு கற்பனை கதாபாத்திரம் இல்லை. இந்த மூன்று திரைப்படங்களில் வரும் கதாநாயகனைப் போன்று வாழ்வதற்கு ஆசைப்படுபவர்கள் இந்த சமுதாயத்தில் குறைவாக இருப்பதனால் இந்த திரைப்படங்களால் அதிகமான ரசிகர்களின் மனதையும் எளிதில் கவர முடியவில்லை.
Leave feedback about this