மாமனிதர் கேப்டன் விஜயகாந்த்துக்கு இரங்கல் கவிதை
கோபுரங்கள் சாய்வதில்லை
என்ற சொல்லாடல் பொய்தான்
தரையில் சரிந்து மண்ணான
எத்தனையோ கோபுரங்களை
நாங்கள் பார்த்துவிட்டோம்
கோபுரங்களில் நீ விதிவிலக்கு
நீ உயரத்தில் ஜொலித்த போது
உன்னைக் கண்டு ரசித்தோம்
வியந்து வேடிக்கை பார்த்தோம்
எங்கள் வியப்பு மாறுமுன்னே
கலங்கவைக்க உன் மரணச் செய்தி
கர்ணன் மீண்டும் இன்னொரு
சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டார்
எளிய மக்களைப் பசியோடு
விட்டுச்செல்ல மனம் வராதே
உன் வாழ்க்கையைப் போல
மரணத்திலும் சதியோ…
உன் உடலைச்சுற்றி கதறி அழும்
எளிய மக்களின் கண்ணீர்
உன் உயரத்தைக் காட்டுகிறது
துன்பப்பட்டவனுக்குத் துணையானாய்
துயரப்பட்டவனுக்குத் தோளானாய்
வெயிலில் பலருக்கு நிழலானாய்
பசித்த உயிர்களுக்குத் தாயானாய்
இனி அவர்கள் எங்குச் செல்வார்கள்?
எங்கள் இதயத்தில் இடியை
இறக்கிய உன் மரணச் செய்தியை
முன்கூட்டியே அறிந்துதான்
வானம் அழுது புலம்பியதோ?
நாடு வெள்ளக் காடானதோ?
இன்று நீ சரிந்து கிடக்கையில்
உன்னைத் தூக்கி நிறுத்த முயலும்
லட்சக்கணக்கான மக்கள் கூட்டம்
இப்போதும் உன்னை அண்ணாந்தே
பார்க்கிறது – இனியும் அப்படித்தான்
மரணத்தில் கூட பொறாமையை
உண்டாக்கியது நீயாகத்தான் இருக்கும்
மண்ணுக்கும் மக்களுக்கும் விருட்சமாக
வளர்ந்து நிழல் தந்து மடிந்த பின்னும்
உரமாகி விதையாகிய விஜியே
வாழ்ந்தால் உன்போல் வாழ வேண்டும்
வீழ்ந்தால் உன்போல் வீழ வேண்டும்
கேப்டன் விஜயகாந்த் வாழ்ந்த காலத்தில் அவரைப் பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது. மனிதனின் யோக்கியத்தை மரணம் சொல்லும் என்பார்கள். கேப்டன் விஜயகாந்த்தின் உடலைச் சுற்றி மக்களின் அழுகுரலைக் கேட்ட பின்பு அந்த உயர்ந்த உள்ளத்துக்கு எனது காணிக்கையை செலுத்துகிறான்.
1 Comment