புத்தரின் போதனைகள். புத்த மதத்தில் கடவுளைப் பற்றிய கோட்பாடுகளோ, கடவுள்தான் இந்த உலகத்தையும் அதன் உயிரினங்களையும் படைத்தார் என்ற நம்பிக்கைகளோ கிடையாது. அதே நேரத்தில் புத்த மதத்தில் கடவுள் மறுப்பும் கிடையாது.
மனிதர்கள் பல சாதி, மத மூட நம்பிக்கைக்குள் சிக்கி பல கொடுமைகளையும் அடக்கு முறைகளையும் அனுபவித்து வந்த சூழ்நிலையில் புத்தர் வாழ்ந்ததால், பெரும்பாலும் அவர்களின் விடுதலைப் பற்றியே புத்தர் சிந்தித்தார். மக்களும் பெரும்பாலும் அவற்றைப் பற்றியே கேள்விகள் கேட்டனர், உலக துன்பங்களிலிருந்து விடுபடும் வழிமுறைகளையே நாடினர்.
கடவுளின் பெயராலேயே பெரும்பாலான அடக்குமுறைகளும் அடிமைத் தனங்களும் உருவாக்கப்பட்டதால் கடவுளைப் பற்றிப் பேசுவதை புத்தர் தவிர்த்துக் கொண்டார். கடவுளைப் பற்றி விவாதித்தால், கடவுளின் பெயரால் அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் மேலும் மூடநம்பிக்கையில் சிக்கி அடிமையாவார்கள் என்பதால் புத்தர் அதனைத் தவிர்த்து வந்தார். கடவுளைப் பற்றியே பேச வேண்டிய சூழ்நிலை இல்லாததால் சொர்க்கம், நரகம், எமன், சித்திர குத்தன் என்று யாரும் தேவைப்படாமல் போனார்கள்.
எந்த மனிதனுக்கும் எந்த உயிரினத்திற்கும் தீங்கை விளைவிக்காதே. மனதுக்கு அடிமையாகாதே, மனதைக் கட்டுப்படுத்த கற்றுக்கொள். உன் வாழ்க்கையை நீ வாழப் பழகு, நான் என்ன கூறுகிறேன் என்பதைக் கேள், என்ன செய்கிறேன் என்பதைக் கவனி; நான் செய்வதைப் பின்பற்றிச் செய்துபார் உனக்குச் சரியெனப் பட்டால் பின்பற்று இல்லையேல் விட்டுவிடு. இதுதான் பொதுவான புத்தரின் போதனையாக இருந்தது.