பொது

பதில் மற்றும் விடை என்ன வித்தியாசம்?

பதில் மற்றும் விடை என்ன வித்தியாசம்? ஒரே பொருளைத் தருவதைப் போன்ற தோற்றம் கொண்ட பல வார்த்தைகள் தமிழில் உள்ளன. வெளித்தோற்றத்திற்கு ஒரே பொருளைக் கொண்டவை போன்று தோன்றினாலும், உண்மையில் அவை ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறான பொருட்கள் இருக்கும்.

உதாரணத்துக்கு, நண்பன், தோழன், கூட்டாளி, சினேகிதன், போன்ற வார்த்தைகள் தோற்றத்தில் ஒரே பொருளைக் கொண்டவை போன்று தெரிந்தாலும் இவற்றின் பொருட்கள் வேற்றுமைகள் உள்ளன. இவை வெவ்வேறு தன்மைகளைக் கொண்ட, பலதரப்பட்ட நட்பை குறிக்கப் பயன்படும் சொற்களாகும்.

இவற்றைப் போலவே பதில் மற்றும் விடை என்ற வார்த்தைகளும் பார்வைக்கு ஒன்றைப் போன்று தெரிந்தாலும் இவை இரண்டும் வெவ்வேறு பொருள் மற்றும் பயன்பாட்டை உடையவை. ஒருவர் கேட்ட கேள்விக்கு இன்னொருவர் வழங்குவது பதில். பதிலை பலரும் வழங்கலாம், அந்த பதில்கள் மாறுபட்டு இருக்கலாம். அவை சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். ஒருவர் கேட்டதற்கு என்ன சொன்னாலும் அல்லது சமிங்கை காட்டினாலும் அதை பதில் என்று கொள்ளலாம்.

ஆனால் விடை என்பது ஒரு தீர்வை குறிக்கும் சொல். ஒரு கேள்வி அல்லது சந்தேகம் மீண்டும் எழாதவாறு கேள்விக்கு அல்லது சந்தேகத்துக்கு பதில் கொடுப்பதுதான் விடை. அதாவது அந்த கேள்வி மீண்டும் எழக்கூடாது, அந்த கேள்வி தொடர்பாக குழப்பமும் எழாதவாறு பதிலில் தெளிவு இருக்க வேண்டும். அதனால் சரியான, இறுதியான ஒன்றுதான் விடையாக இருக்க முடியும்.

பதில் என்பது ஒவ்வொரு நபரின் புரிதலுக்கு ஏற்ப மாறுபடலாம், அவற்றில் சில சரியான ஏற்றுக்கொள்ளக் கூடிய பதிலாகவும் தோன்றலாம், சில தவறாகவும் தெரியலாம். ஆனால் விடை என்பது ஒன்றாகவும், இறுதியானதாகவும் இருத்தல் வேண்டும்.

பள்ளிப் பிள்ளைகள் பரீட்சையில் பதில் எழுதப் பயன்படுத்தும் காகிதத்தை விடைத்தாள் என்று அழைக்கிறோம். அதைப்போலவே பள்ளி பிள்ளைகள் பரீட்சையில் கேள்விகளுக்கு விடை எழுத வேண்டும் என்றுதான் கூறுகிறோம். காரணம் அவர்கள் எழுதும் பதில்கள் சரியானவையாகவும், தவறுகள் இல்லாதவையாகவும் இருத்தல் வேண்டும் என்பதால் அவற்றுக்கு விடை என்று இலக்கணம் வகுக்கிறோம்.

நம் வாழ்க்கையில் நமக்கு உண்டாகும் சந்தேகங்களுக்கு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைக் கொடுக்கலாம். ஆனால் அந்த சந்தேகங்களிலிருந்து நமக்கு விடுதலை வழங்கக் கூடிய ஒன்று தான் விடை. ஒன்று தெளிவான விளக்கம் கிடைத்துவிடும் அல்லது சந்தேகம் மற்றும் கேள்விகள் மறைந்துவிடும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X