ஔவையார் கூறும் மனித வாழ்க்கை. மனித வாழ்க்கை என்றால் என்ன? என்ற கேள்விக்குப் பதில் கூறும் வகையில் அமைந்திருக்கும் ஔவையாரின் பாடல். இந்தப் பாடல் மனிதப் பிறப்பின் உன்னதத்தை உணர்த்தும் அதேவேளையில் மனிதர்களின் வளர்ச்சி நிலைகளையும் பிரதிபலிக்கிறது.
அரியது கேட்கின் வரிவடி வேலோய்
ஔவையார்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே
இந்தப் பாடலின் விரிவான விளக்கம்
மனிதனாகப் பிறப்பதே மிகவும் அபூர்வம். அதிலும் உடல் ஊனங்கள் இல்லாமல் பிறப்பது அதைவிட அபூர்வம். அதிலும் அறிவும் ஞானமும் பெறக்கூடிய அளவுக்கு புத்திக்கூர்மையுடன் பிறப்பது அதைவிட அபூர்வம். அதிலும் கற்ற கல்வியைக் கொண்டு பிற மனிதர்களுக்குப் பயன்தரும் வாழ்க்கையை வாழ்வதும் அதைவிட அபூர்வம். அதிலும் பிறப்பின் நோக்கத்தை அறிந்து கொள்ள ஆன்மீகப் பாதையில் செல்வது அதைவிட அபூர்வம் என்பதை ஔவையார் இந்தப் பாடலின் மூலமாக உணர்த்துகிறார்.
இந்தப் பாடல், அறியாமையுடன் பூமியில் பிறக்கும் கடைநிலை மனிதனிலிருந்து ஞானியாக வளரும் படிநிலையை உணர்த்துவதாக நான் பார்க்கிறேன். எவரெல்லாம் சாதாரண இரண்டு கால் உயிரினம் என்ற நிலையைத் தாண்டி, தன் பிறப்பின் நோக்கத்தைத் தேடி, தவம் செய்யும் அளவுக்கு மனப்பக்குவம் அடைகிறார்களோ, அவர்களுக்கு வானவர்கள் வாழும் இந்திரலோகத்துக் கதவு திறக்கப்படும், அதாவது தேவர்களின் நிலையை அடைவார்கள் என்கிறார்.
ஆனால் ‘அரிது’ என்ற ஒற்றை வார்த்தையின் மூலமாக இவை எளிதாக அடையக்கூடிய நிலைகள் அல்ல என்பதையும் உணர்த்துகிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் விழிப்புணர்வுடன் வாழ்பவர்களுக்கு மட்டுமே தனது குறைகளை நீக்கி, வாழ்க்கையில் மேன்மை நிலையை அடைந்து, வீடுபேற்றை எய்தும் வாய்ப்பு கிட்டும்.
அடுத்த பிறவி என்று இருந்தால் அது மனிதப் பிறவியாகத்தான் இருக்கும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது. அபூர்வமான மனித பிறப்பை எட்டிவிட்டோம், இந்த வாய்ப்பை தவற விட்டுவிடக் கூடாது.