ஆன்மீகம்

ஆவுடையார் கோவில்

ஆவுடையார் கோவில்

திருப்பெருந்துறை ஆலயத்தின் சிறப்புகள்

இறைவன் – ஸ்ரீ ஆத்மநாதர்
இறைவி – ஸ்ரீ யோகாம்பாள்
கோயிலை எழுப்பியவர் – ஸ்ரீ மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் வரலாறு

மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூரில் மாணிக்கவாசகர் பிறந்தார். மாணிக்கவாசகரின் இயற்பெயர் தெரியவில்லை அவர் பிறந்த ஊரை ஒட்டி திருவாதவூரார் என்று குறிப்பிடப்படுகிறார். திருவாசகத்தை இயற்றியதால் மாணிக்கவாசகர் என்ற பெயர் இறைவனால் சூட்டப்பட்டது. இவர் மதுரையை அரசாண்ட அரிமர்த்தன பாண்டிய மன்னரிடம் முதலமைச்சராக இருந்தவர். மன்னனின் ஆணைப்படி அரபு நாட்டு குதிரைகளைக் கொள்முதல் செய்வதற்காக அப்போது பிரபல்யமான இருந்த தொண்டி துறைமுகத்துக்குப் புறப்பட்டார்.

மதுரையிலிருந்து தொண்டியை நோக்கிய பயணத்தின் போது திருப்பெருந்துறையைக் கடக்கையில் அங்கு ஒரு குரு சில சீடர்களுக்கு உபதேசம் வழங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். இவரும் அவர்களின் அருகில் அமர்ந்து உபதேசங்களைக் கேட்க தொடங்கினார். உபதேசங்கள் நிறைவு பெற்றதும் அந்த குருவும் அவரது மாணவர்களும் அங்கிருந்து புறப்பட ஆயத்தமானார்கள். உபதேசங்களை பணிவுடன் கேட்டுக் கொண்டிருந்த வாதவூரரைக் கண்டு, எங்களுடன் வருகிறீரா? அன்று அந்த குரு வினவ, கடமையில் காரணமாக வாதவூரர் மறுத்துவிட்டார். சற்று நேரத்தில் அந்த குருவும் அவர்தம் சீடர்களும் மறைந்து போகவே, அவர் மனிதர் அல்ல என்பதை உணர்ந்து அந்த இடத்தில், அந்த தெய்வீக அனுபவத்தின் நினைவாக ஒரு கோயிலை எழுப்பினார்.

குதிரைகளை கொள்முதல் செய்வதற்காக கொடுக்கப்பட்ட பணத்தில் கோயில் எழுப்பியதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் திருவாதவூரரைக் கைதுசெய்யக் கட்டளையிட்டார். வாதவூரார் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக மன்னர் முன்பு நிறுத்தப்பட்டார். மன்னர் குதிரைகள் எங்கே என்று வினவியபோது, குதிரை வரும் என்று வாக்களித்தார் திருவாதவூரர்.

திருவாதவூரரின் வாக்குப்படி தெய்வீக அம்சங்கள் பொருந்திய ஒரு அழகிய ஆடவன் மன்னர் விரும்பியவாறு குதிரைகளைக் கொடுத்துவிட்டு, திருவாதவூரரை மீட்டுச் சென்றார். குதிரைகள் அனைத்தும் தொழுவத்தில் அடைக்கப்பட்டன. அன்று இரவு நேரம் தொடங்கியதும் அந்த குதிரைகளின் இயல்புகள் மாற தொடங்கின. சற்று நேரத்தில் அந்த குதிரைகள் அனைத்தும் நரிகளாக உருமாறி ஊளையிட்டன, தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்த குதிரைகளைக் கடித்துக் குதறின. இந்நிகழ்வுக்குப் பிறகு தான் குதிரைகளைக் கொண்டு வந்தவர் சிவபெருமான் என்பதை மன்னர் உணர்ந்துகொண்டார்.

சிறையிலிருந்து விடுதலையான மாணிக்கவாசகர் இறைவனை நோக்கி பல பாடல்களைப் பாடினார். அவை திருவாசகம் எனும் நூலானது. இறுதியில் மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் ஜோதியுடன் இரண்டறக் கலந்தார்.

திருப்பெருந்துறை (ஆவுடையார் கோவில்) ஆலயத்தில் உள்ளே கருவறை அமைந்திருக்கும் பகுதிதான் மாணிக்கவாசகர் எழுப்பிய முதல் கோயில். பிறகு வந்த மன்னர்கள் பலர் அந்த கோயிலை விரிவாக்கம் செய்தனர். அதனைச் சுற்றி பெரிய கோயில்களையும், மண்டபங்களையும், சிற்பங்களையும், மதில்களையும் அமைத்தனர். திருப்பெருந்துறை எனும் ஊர் தற்போது ஆவுடையார் கோவில் என்று அழைக்கப்படுகிறது.

(இந்த வரலாற்றை மிகச் சுருக்கமாக எழுதி உள்ளேன் ஆர்வமுள்ளவர்கள் தேடி விரிவாக படித்துக் கொள்ளவும்).

திருப்பெருந்துறை ஆலயத்தின் சிறப்பம்சங்கள்

1. திருப்பெருந்துறை ஆலயத்தில், நந்தி, கொடிமரம், மற்றும் பலிபீடம் கிடையாது.

2. இறைவனுக்கு உருவம் கிடையாது, சம்பிரதாயத்துக்காக ஆவடை மட்டுமே அருவுருவமாக.

3. அக்கினி, சூரியன், சந்திரன், மற்றும் நட்சத்திரங்கள் தீபங்களாக ஏற்றப்படுகின்றன.

4. கோயிலின் உள்ளே எந்த திசையில் இருந்தாலும் நிழல் பக்தர்கள் மீதே விழும் தரையில் விழாது.

5. சாமியின் முன் நிற்கும் போது பக்தர்களின் நிழல் சுவாமியின் மீது விழுவதைப் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

6. சாமிக்குக் காட்டப்படும் கற்பூரம் சன்னதியை விட்டு வெளியே கொண்டுவரப் படுவதில்லை.

7. சாதத்தை படைக்கல்லில் கொட்டி சாமிக்கு நெய்வேத்தியம் செய்கிறார்கள். புழுங்கல் அரிசி, கீரை மற்றும் பாகற்காயைக் கொண்டு படையல் செய்யப்படுகிறது.

8. அம்பாளுக்கும் சிலை கிடையாது, திருவடி மட்டுமே சடங்குக்காக வைத்திருக்கிறார்கள்.

9. தெற்கு திசையை நோக்கிய சிவாலயம்.

10. குருந்த மரம் தல விருட்சம்.

11. தாம்பூலத்தைத் திருப்பித்தராத சிவாலயம்.

12. ஆண்டுக்கு ஒருமுறை இலை போட்டு பொங்கல் படையல் வைக்கப்படுகிறது.

13. சூரிய சந்திர கிரகணக் காலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.

14. இந்தக் கோயிலில் பக்தனுக்கே முதலிடம் வழங்கப்படுகிறது. ஆணி மார்கழி போன்ற திருவிழாக்களில் மாணிக்கவாசகரே நகர் வலம் வருகிறார்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field