ஆரோக்கியத்தை அளக்கும் வழிமுறைகள். மனிதர்களின் ஆரோக்கியத்தை அளந்து பார்க்கும் சில வழிமுறைகள். ஸ்கேன், எக்ஸ்ரே, லேப் டெஸ்ட், யூரின் டெஸ்ட், மோஷன் டெஸ்ட் போன்ற எதுவுமே தேவையில்லை. ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்யவும் தேவையில்லை. கீழே குறிப்பிடப்பட்ட ஐந்து விசயங்களைக் கவனித்தாலே போதுமானது.
1. தரமான பசி
2. தரமான தாகம்
3. திருப்தியான உறக்கம்
4. முழுமையான கழிவு நீக்கம்
5. மன அமைதி
தரமான பசி
உழைப்புக்குத் தகுந்த பசி இருக்கவேண்டும். உழைப்பு குறைவாக இருந்தால் பசியின் அளவும் குறைவாக இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு வேளைகள் பசி உணர்வு உண்டாக வேண்டும். உட்கொண்ட உணவு எளிதில் ஜீரணமாக வேண்டும். உணவை உட்கொண்ட பிறகு வயிறு உப்புசம், வயிற்றில் பாரம், அசதி, தூக்கம் உண்டாகாமல் இருக்க வேண்டும்.
தரமான தாகம்
உழைப்புக்கேற்ற அளவான தாகம் உருவாக வேண்டும். உதடு காய்வது தாகம் அல்ல. தாகத்துக்கு வெறும் தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும். புட்டியில் அடைத்த, சுவை, மனம், இரசாயனம் கலந்த நீரை அருந்தக் கூடாது.
திருப்தியான உறக்கம்
இரவில் படுத்த பத்து நிமிடங்களில் உறங்கிவிட வேண்டும். இடையில் காலை வரையில் எழுந்திருக்கக் கூடாது. தூங்கி எழும் போது அசதி இருக்கக் கூடாது. உறக்கத்திலிருந்து எழுந்ததும் உடல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். மனம் அமைதியாக இருக்க வேண்டும்.
முழுமையான கழிவு நீக்கம்
தினமும் காலையில் சுலபமாக மலம் கழிக்க வேண்டும். மலம் முழுமையாகவும் சுலபமாகவும் வெளியேற வேண்டும். மலம் கழித்த திருப்தி இருக்க வேண்டும். சிறுநீர் சுலபமாக வெளியேற வேண்டும். சிறுநீர் கழித்த திருப்தி இருக்க வேண்டும்.
மன அமைதி
மனம் அமைதியாக இருத்தல் வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மனதில் அச்சம், குழப்பம், சோர்வு உருவாகக்கூடாது. அளவுக்கு மீறிய மகிழ்ச்சி, கவலை, பயம், துக்கம், கோபம், தாழ்வு மனப்பான்மை, மன உளைச்சல் உருவாகக்கூடாது. மனம் எப்போதும் சமநிலையில், நிதானமாக இருக்க வேண்டும்.
பசி, தாகம், உறக்கம், கழிவு நீக்கம், மன அமைதி, இவை ஐந்தும் சரியாக இருந்தால் அந்த மனிதர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று பொருளாகும். இவை தடைப்பட்டாலும், இவற்றைச் செய்வதில் சிரமத்தை எதிர்நோக்கினாலும், குறைந்தாலும், அதிகரித்தாலும், ஆரோக்கிய குறைந்துள்ளது என்று பொருளாகும்.
ஆரோக்கியத்தைத் தக்க வைத்துக் கொள்ள
பசி இன்றி உணவு உண்பது கூடாது. தாகம் இன்றி தண்ணீர் அருந்தக்கூடாது. இரவு பத்து மணி முதல் காலை நான்கு மணி வரையில் கண்டிப்பாக உறங்க வேண்டும். தினமும் காலையில் உடல் கழிவுகளை வெளியேற்ற வேண்டும். மனதை எப்போதும் அமைதியாகவும் சாந்தமாகவும் வைத்திருக்க வேண்டும்.
மேலே கூறப்பட்ட ஐந்தும் சரியாகவும், அளவாகவும் இருந்தால், அந்த மனிதன் நிச்சயமாக ஆரோக்கியமாக இருப்பான், ஆரோக்கியமாக இருக்கிறான். நோய்களைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. எந்த நோயாக இருந்தாலும், எவ்வளவு கடுமையாக இருந்தாலும். மேலே குறிப்பிடப் பட்டவற்றை சீர் செய்தால், நிச்சயமாக அனைத்து நோய்களும் சுயமாக குணமாகும்.
உங்கள் உடலின் கட்டளைகளைப் புரிந்துக் கொண்டு, உங்கள் உடலை நீங்கள் கவனித்தால், உங்கள் உடல் உங்களைக் கவனித்துக் கொள்ளும்.