அறிவாளிக்கும் புத்திசாலிக்கும் என்ன வித்தியாசம்?
மனம்

அறிவாளிக்கும் புத்திசாலிக்கும் என்ன வித்தியாசம்?

அறிவாளிக்கும் புத்திசாலிக்கும் என்ன வித்தியாசம்? புத்தி மற்றும் அறிவு, இவ்விரண்டு சொற்களும் ஒரே பொருளைத் தருபவை போன்று தோன்றினாலும் இவையிரண்டும் மனதின் வெவ்வேறு தன்மைகளைக் குறிக்கின்றன. இவையிரண்டிற்கும் மனதின் ஆற்றலுடன் தொடர்பிருந்தாலும், இவற்றின் சிந்திக்கும் தன்மைகளும் ஆழங்களும் மாறுபட்டவை.

மனம் என்பது நம் ஐம்பொறிகளைக் கொண்டு கற்றுக்கொண்ட மற்றும் அனுபவித்த அனுபவங்கள். ஐம்பொறிகள் அனுபவிக்கும் அனுபவங்கள் பதிவாக மாறி, மனதை உருவாக்குகின்றன. ஐம்பொறிகள் அனுபவிக்கும் அனுபவங்களை சிந்திக்கும் போதும், ஆராயும் போதும் அவை அறிவாக மாறுகின்றன.

புத்தி என்பது பிறப்பில் வருவது. குழந்தைகள் பிறக்கும்போதே புத்தியுடன் பிறக்கிறார்கள். குழந்தை பிறக்கும்போதே அதற்கு பசி என்றால் என்னவென்று தெரிகிறது, சிறுநீர், மலம் கழிக்க தெரிகிறது, பால் அருந்துவது எவ்வாறு என்பது தெரிகிறது, பசித்தால் அழவேண்டும் என்பது தெரிகிறது. கண், காது, வாய், கை, கால் மற்றும் ஏனைய உடல் உறுப்புகளையும் பயன்படுத்தத் தெரிந்திருக்கிறது.

அதைப் போன்றே ஒரு குழந்தை இந்த பூமியில் வாழ்வதற்கு அடிப்படைத் தேவையாக இருக்கும் அத்தனை விசயங்களும், குழந்தை பிறக்கும் போது குழந்தையின் மனதில் (உடலில்) பதிந்தே இருக்கும். இந்த அடிப்படை அறிவுகளை புத்தி என்று அழைக்கிறோம். பிறவியிலேயே சிந்திக்கும் ஆற்றலும், ஒரு விசயத்தை எளிதாக புரிந்து கொள்ளும் ஆற்றலும், ஒரே சூழ்நிலையை பல கோணங்களில் அணுகக் கூடிய ஆற்றலும், உள்ளவர்களை புத்திசாலிகள் என்று அழைக்கிறோம். காரணம் அந்த அறிவும் திறமையும் அவர்களுக்கு பிறவியிலேயே வந்தவை.

பிறந்த பிறகு வெளியிலிருந்து கற்றுக்கொண்டு புத்திக்கூர்மையுடன் இருப்பவர்களை அறிவாளிகள் என்று அழைக்கிறோம். அறிவாளிகளும் புத்திசாலிகளும் ஒன்றாக தெரிந்தாலும் இருவருக்குள்ளும் சில வித்தியாசங்கள் உள்ளன. அறிவாளி தான் கற்றுக்கொண்ட அல்லது தன் அனுபவத்தில் உள்ளவற்றை வைத்துக்கொண்டு ஒரு விசயத்தை அணுகுவார். ஆனால் புத்திசாலி ஒரு விசயத்தை பல கோணங்களில் ஆராய்ந்து தன் சொந்த அறிவையும் அனுபவங்களையும் பயன்படுத்தி அதை அணுகுவார்.

அறிவாளிக்கு தனது அனுபவத்தில் இல்லாத ஒன்றை விளங்கிக் கொள்ளவோ, அவற்றுக்குத் தீர்வு காணவோ கடினமாக இருக்கும். ஆனால் புத்திசாலி எந்த புதிய விசயத்தையும் எளிதாக அறிந்து கொள்வார், எவ்வாறான புதிய சூழ்நிலையானாலும் அவற்றுக்கு சுயமாகவே தீர்வு காண்பார். பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொள்வது அறிவு, வாழ்க்கையில் கற்றுக்கொள்வது புத்தி.

Leave feedback about this

  • Rating
X