அறிவாளி மற்றும் புத்திசாலி குழந்தைகள்
மனம்

அறிவாளி மற்றும் புத்திசாலி குழந்தைகள்

அறிவாளி மற்றும் புத்திசாலி குழந்தைகள். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கின்னஸ் சாதனைக்குத் தயார் செய்வதைப் போன்று வளர்க்கிறார்கள். அளவுக்கு மீறிய பாசமும் கவனிப்பும் கட்டுப்பாடும் கல்வியும் அக்குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதிக்கின்றன. இந்த வளர்ப்பு முறை எதிர்காலத்தில் எதார்த்த வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாதவர்களாகவும் சமுதாயத்தில் வாழத் தெரியாதவர்களாகவும் மாற்றிவிடுகிறது.

குழந்தையை சரியாக வளர்ப்பதாக நினைத்து கொண்டு, பல பெற்றோர்கள் தங்களின் கவனம் முழுவதையும் குழந்தையின் மீது வைத்திருக்கிறார்கள், இது தவறான அணுகுமுறையாகும். இதற்கு மாற்றாக குழந்தையை வளர்க்கும் போது முழு கவனத்தையும் தன்மீதும் அந்தக் குழந்தையை சுற்றி இருக்கும் பெரியவர்களின் மீதும் வைத்திருக்க வேண்டும். குழந்தையை சுற்றி இருக்கும் பெரியவர்கள் என்ன செய்கிறார்கள்? என்ன பேசுகிறார்கள்? எவ்வாறு நடந்து கொள்கிறார்கள்? என்பதை குழந்தைகள் பிறந்தது முதலே கவனிக்க தொடங்குகிறார்கள்.

ஒரு குழந்தை பெரியவன் ஆனதும் எவ்வாறு நடந்து கொள்வான்? எவ்வாறு தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வான்? எவ்வாறு தன் வாழ்க்கையை வாழ்வான்? என்பதெல்லாம் பெற்றோர்கள் கற்றுக் கொடுத்தவைகளை கொண்டும், பள்ளிக்கூடங்களில் கற்றுக் கொடுத்தவைகளைக் கொண்டு அமைவதில்லை. மாறாக அந்த குழந்தை தனது பன்னிரண்டாவது வயதுக்குள், பார்த்த, கேட்ட, அனுபவித்த, விசயங்களைக் கொண்டே அமைகின்றன. தன்னை சுற்றி இருக்கும் பெரியவர்களின், செயல்களையும், நடவடிக்கைகளையும், சொற்களையும், பார்த்து, கேட்டு, பின்பற்றி குழந்தைகள் வளர்க்கிறார்கள்.

புத்திசாலிக்கும் அறிவாளிக்கும் உள்ள வித்தியாசம் பல பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. ஒரு குழந்தையை நல்ல பள்ளிக்கூடத்தில், நன்றாக பாடம் நடத்தக் கூடிய ஆசிரியரிடம் கல்வி கற்க வைத்தால். அந்த ஆசிரியர் அந்த குழந்தையை அறிவாளியாக மாற்றலாம், ஆனால் எத்தனை பள்ளிக்கூடத்தில், எத்தனை பல்கலைக்கழகத்தில், கற்றாலும் எந்த குழந்தையையும் புத்திசாலியாக மாற்ற முடியாது.

அறிவாளிகளுக்கும் புத்திசாலிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், அறிவாளி தான் கற்றுக் கொண்டவற்றை, கற்றுக்கொண்ட துறையில் பயன்படுத்துவார். உதாரணத்திற்கு காரை பழுதுபார்க்க கற்றுக்கொண்டவர் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்த அறிவைக் கொண்டு காரை மட்டுமே பழுது பார்க்க முடியும். அதை விடுத்து மற்ற வாகனங்களைப் பழுது பார்க்க தெரியாது, அவை பற்றிய அறிவும் புரிதலும் இருக்காது. ஆனால் ஒரு புத்திசாலி இதே காரை பழுதுபார்க்கும் படிப்பைப் படித்தாலும், தான் கற்றுக்கொண்ட இந்த அறிவை மற்ற துறைகளில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற புரிதலும் இருக்கும்.

அறிவாளி ஒரு சூழ்நிலையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது அவருடைய அனுபவத்தில் அல்லது படிப்பில் இருந்தால் அதைப் பயன்படுத்துவார். இல்லை என்றால் அந்த சூழ்நிலைக்குக் கட்டுப்பட்டு நடப்பார். புத்திசாலிக்கு ஒரு சூழ்நிலையைச் சமாளித்து, அதிலிருந்து வெளிவரும் ஆற்றல் இயல்பாகவே இருக்கும். புத்திசாலி அவர் வாழ்நாளிலேயே சந்தித்திராத, கேள்விப்பட்டிராத ஒரு பிரச்சினையை எதிர்கொண்டாலும் கூட, அதிலிருந்து வெளிவரும் ஆற்றலும் திறமையும் இயல்பாக இருக்கும்.

ஒரு குழந்தை படிப்பதினால் அறிவாளி ஆகிறான் ஆனால் அவனது அனுபவங்களின் மூலமே புத்திசாலி ஆகிறான். குழந்தைகளின் பெரும்பாலான அறிவு வளர்ச்சி பன்னிரண்டு வயதுக்குள்ளாகவே முடிந்துவிடுவதால், வெளி உலகத்தைப் பார்க்காது, மனிதர்களுடன் கலக்காது வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகள், மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர், என்று எந்த வகையான தொழில் புரிந்தாலும் அவர்களுக்கு புத்திக்கூர்மை குறைவாகவே இருக்கும்.

அவர்களின் துறையைச் சாராத ஒரு சூழ்நிலையை, அவர்களால் சமாளிக்க முடிவதில்லை. அவற்றைச் சமாளிக்க பிறரின் உதவியையே நாடுகிறார்கள். வெளி மனிதர்களுடனும், பிற குழந்தைகளுடனும் விளையாடி, மண்ணில் புரண்டு, குளத்தில் குதித்து, ஆற்றில் நீந்தி, இயற்கையுடனும், மனிதர்களுடனும், மக்களுடனும், இந்த சமுதாயத்திலும் கலந்து வளரும் குழந்தைகள் புத்திசாலிகளாக உருவாகிறார்கள். பட்டபடிப்பு இல்லாத குழந்தைக்குக் கூட, எவ்வாறான சூழ்நிலையாக இருந்தாலும் அதைச் சமாளிக்கும் ஆற்றல் இயற்கையாகவே உருவாகிவிடுகிறது. சிறிய வருமானம் இருந்தால் கூட அதை வைத்துக் கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக்கூடிய புத்திசாலித்தனம் அவர்களுக்கு அமைந்து விடுகிறது.

நீங்கள் முதலில் வெளி உலகத்துக்கு வாருங்கள், உங்கள் குழந்தைகளுக்கும் வெளியுலகத்துடன் வாழக் கற்றுக்கொடுங்கள். மனிதர்கள் அதிகமாக இருக்கும், கூடும் இடங்களுக்கும், அடிக்கடி உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். அண்டை வீட்டுப் பிள்ளைகளுடன் உங்கள் பிள்ளைகள் சேர்ந்து விளையாட அனுப்புங்கள். உங்கள் உற்றார், உறவினர், நண்பர்களுடன், உங்கள் குழந்தைகள் இயல்பாக பழக பேச அனுமதியுங்கள்.

இயற்கையுடன் இணைந்து வாழ குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். ஆறு, குளம், கடல், போன்ற நீர் நிலைகளுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று நீந்தச் சொல்லுங்கள். காடு, மலை, கடல், போன்ற இடங்களுக்கு குழந்தைகளை விளையாட அழைத்துச் செல்லுங்கள். இயற்கையை, விலங்குகளை மற்றும் மனிதர்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

குழந்தைகளுக்கு ஆயிரம் விசயங்களை புத்தகங்களில் இருந்து கற்றுக் கொடுப்பதை விடவும், ஒரு சில விசயங்களை இயற்கையில் இருந்து கற்றுக் கொடுத்தால், அது அவர்கள் வாழ்நாள் முழுவதும் பயனுள்ளதாக இருக்கும். புத்திசாலிக் குழந்தையால் அறிவாளியாக முடியும். ஆனால் எந்த அறிவாளியாலும் புத்திசாலியாக முடியாது. சிறுவயதைத் தாண்டிவிட்டால், புத்தியைக் கூர்மைப் படுத்துவது சிரமம். இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து.

Spiritualist, Reiki Master, Healer, Acupuncturist, Writer, Thinker, Speaker, Author.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *