அரேபியர்களும் இஸ்லாமும்
ஆன்மீகம்

அரேபியர்களும் இஸ்லாமும்

அரேபியர்களும் இஸ்லாமும். எனக்கு அரேபியர்களின் மீது எந்த தனிப்பட்ட விருப்பு வெறுப்பும் கிடையாது, இஸ்லாமியர்களுக்கு புரிதல் உண்டாக வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

இந்த கட்டுரையை வாசிக்கும் அனைவருக்கும் ஒரு விசயத்தை முதலில் குறிப்பிட விரும்புகிறேன். இஸ்லாம் வேறு அரேபியர்களின் கலாச்சாரம் என்பது வேறு. பல்லாயிரம் ஆண்டுகளாக வழி வழியாகப் பின்பற்றப்பட்டு வந்த உணவு முறைகளையும், வாழ்க்கை முறைகளையும், கலாச்சாரத்தையும் அரேபியர்கள் இன்றும் பின்பற்றுகிறார்கள். அரேபியர்களின் நாகரீகம் என்பது நபி முகமது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்கள் கொண்டுவந்த இஸ்லாமும் தோன்றுவதற்கு முன்பாகவே இருந்து வருகிறது.

இந்தியா, சீனா, எகிப்து போன்ற நாடுகளின் கலாச்சாரங்களைப் பற்றி படித்திருப்போம் கேள்விப்பட்டிருப்போம். அவற்றைப் போன்றே அரேபியர்களுக்கும் தனிப்பட்ட கலாச்சாரங்கள் உள்ளன. இஸ்லாமிய வாழ்க்கை முறைகளை கடைப்பிடிக்கத் தொடங்கிய அரேபியர்கள் முழுமையாக தங்களின் கலாச்சாரங்களை விட்டுவிடவில்லை.

நபி முகமது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அரேபியத் தேசத்தில் பிறந்ததால் அரேபியர்கள் மற்றவர்களை விடவும் உயர்ந்தவர்கள் என்று எண்ணுவது தவறு. அதைப்போன்றே அரேபியர்கள் செய்வது அனைத்தும் இஸ்லாமிய மார்க்கம் சார்ந்தவை என்று எண்ணுவதும் தவறு.

அரேபிய தேசத்தில் பின்பற்றப்பட்டு வரும் உணவு முறையும், ஆடை உடுத்தும் முறையும் அவர்களின் கலாச்சாரமே ஒழிய அவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. அரேபியர்களின் உணவு முறைகள் மற்றும் உடுத்தும் முறைகளை மற்ற நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என்று இஸ்லாத்தில் எந்த நிபந்தனையும் கிடையாது. இஸ்லாமியர்களின் உணவு முறை மற்றும் உடை உடுத்தும் முறைகளைப் பற்றி அல்குர்ஆனிலே தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது.

முஸ்லிம்கள் அல்குர்ஆனை வாசித்து அதன்படி உடையையும், உணவு முறைகளையும், வாழ்க்கை முறைகளையும் அமைத்துக் கொள்ள வேண்டுமே ஒழிய அரபு நாடுகளில் வாழ்பவர்களைப் பார்த்து பின்பற்றக் கூடாது.

நபி முகமது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அரேபிய தேசத்துக்கு அனுப்பப்பட்டதற்குக் காரணம் அன்றைய சூழ்நிலையில் அரேபியர்கள் தான் உலகில் மிகவும் பின்தங்கிய சமூகமாக இருந்தார்கள். அவர்களுக்குத் தான் ஒரு நல்ல தலைவரும் வழிகாட்டியும் தேவைப்பட்டார். அதனால்தான் அல்லாஹ் (இறைவன்) நபி அவர்களை அரேபிய தேசத்தில் இறக்கினார்.

اِنَّاۤ اَرْسَلْنٰكَ بِالْحَـقِّ بَشِيْرًا وَّنَذِيْرًا ۙ‌ وَّلَاتُسْــٴَــلُ عَنْ اَصْحٰبِ الْجَحِيْمِ‏
(நபியே!) நாம் உம்மை உண்மையுடன், (நல்லடியாருக்கு) நன்மாராயம் கூறுபவராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; நரகவாதிகளைப் பற்றி நீர் வினவப்படமாட்டீர். (அல்குர்ஆன் : 2:119 )

كَمَآ اَرْسَلْنَا فِيْکُمْ رَسُوْلًا مِّنْکُمْ يَتْلُوْا عَلَيْكُمْ اٰيٰتِنَا وَيُزَكِّيْکُمْ وَيُعَلِّمُکُمُ الْكِتٰبَ وَالْحِکْمَةَ وَيُعَلِّمُكُمْ مَّا لَمْ تَكُوْنُوْا تَعْلَمُوْنَ ؕ‌ۛ‏
இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப் படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம். (அல்குர்ஆன் : 2:151 )

وَكَذٰلِكَ اَنْزَلْنٰهُ قُرْاٰنًا عَرَبِيًّا وَّ صَرَّفْنَا فِيْهِ مِنَ الْوَعِيْدِ لَعَلَّهُمْ يَتَّقُوْنَ اَوْ يُحْدِثُ لَهُمْ ذِكْرًا‏
மேலும், இவ்விதமாகவே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம்; அவர்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு, அல்லது நல்லுபதேசத்தை அவர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு, இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை விவரித்திருக்கின்றோம். (அல்குர்ஆன் : 20:113 )

இன்று அறியாமையில் இருக்கும் சில மனிதர்கள், குறிப்பாக அரசியல் வியாதிகள் (வாதிகள்), பாகிஸ்தான் என்றால் இஸ்லாம், இஸ்லாம் என்றால் பாகிஸ்தான் என்று கூறுவார்கள், இதுவும் தவறு. இஸ்லாமிய மார்க்கத்தை தேசிய மதமாகக் கொண்ட பல இஸ்லாமிய நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று அவ்வளவுதான். மற்றபடி இஸ்லாமிய மார்க்கத்துக்கும் பாகிஸ்தானுக்கு எந்த தொடர்பும் கிடையாது. பாகிஸ்தானில் வாழும் முஸ்லிம்களும் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களும் ஒரே இறைவனை (அல்லாஹ்வ) வணங்குகிறார்கள். இதைத் தவிர்த்து பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கிடையில் எந்த உறவும் கிடையாது.

இஸ்லாமியர்களுக்கு வாழ்க்கையின் வழிகாட்டி அல்குர்ஆனும் நபி முகமது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மட்டுமே. அல்குர்ஆனையும் நபிகள் நாயகத்தையும் தவிர முஸ்லிம்கள் எந்த மனிதரையும், இனத்தையும், புத்தகத்தையும் பின்பற்றக் கூடாது. அல்குர்ஆனை உங்களுக்குத் தெரிந்த மொழியில் வாசித்து, புரிந்து கொண்டு, அதனை பின்பற்றுங்கள். அதுதான் இஸ்லாம்.

Spiritualist, Reiki Master, Healer, Acupuncturist, Writer, Thinker, Speaker, Author.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *