இந்த உலகம் ஆன்மாக்களின் பயிற்சிப் பட்டறை. இந்த உலக வாழ்க்கையை எனக்குப் புரிந்த மொழியில் சொல்கிறேன் கேளுங்கள். இந்த உலகம் ஆன்மாக்களின் பயிற்சிப் பட்டறை. அறிவு இல்லாத ஜீவனாக இந்தப் பூமியில் தோன்றும் உயிர்கள் ஒரு அறிவு முதல் ஆறு அறிவு ஜீவன் வரையில் பரிணாமம் அடைந்து இந்தப் பூமியில் வாழ்கின்றன. ஆறாவது அறிவு முழுமைப் பெற்றதும் வேறு உலகத்துக்குச் செல்கின்றன.
வாழ்க்கை பாடத்தை ஒழுங்காகப் படித்துப் புரிந்து கொள்ளும் உயிர்கள் எந்தத் தடுமாற்றமும் இன்றி தன் பயணத்தைத் தொடர்கின்றன, தன் இலக்கை அடைகின்றன. ஐந்து அறிவு வரையில் இயந்திரம் போன்று இயற்கை ஆன்மாக்களை ஓட்டிச் செல்லும். ஆறாவது அறிவை எட்டியதும் மனம் முழுமை பெறும். மனம் எனும் மாயையில் சிக்கிய உயிர்கள் இந்த உலக வாழ்க்கையைத் துறக்க முடியாமல் தள்ளாடும். அந்த ஆன்மாக்களுக்கு வழிகாட்டி கூட்டிச் செல்லவே ஞானிகள் இந்தப் பூமியில் தோன்றுகிறார்கள். ஓர் அறிவு முதலாக ஒவ்வொரு பிறப்பும் ஆன்மாக்களுக்குப் பயிற்சிதான். ஆன்மாக்களைச் செம்மை படுத்தவே இந்த உலக வாழ்க்கை.
“வீடு” என்று குறிப்பிடப்படும் ஆன்மாக்களின் தாய் கிரகத்தில் தவறுச் செய்யும் ஆன்மாக்கள் தண்டனைக்காகவும் பயிற்சிக்காகவும் இந்தப் பூமிக்கு வருவதுண்டு. சிறு வயது முதலே பிரசித்தி பெற்ற பலரைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். முதிர்ச்சி அடைந்த ஆன்மாக்களும், வீட்டிலிருந்து வரும் ஆன்மாக்களும், முக்தி அடைந்த ஆன்மாக்களும் இந்தப் பூமியில் பிறக்கும் போதே ஞானியாகவும், மகானாகவும், மென்மை பெற்றவர்களாகவும் விளங்குகிறார்கள்.
இந்தப் பூமி உங்களுக்கு ஒரு பயிற்சி மையம் என்பதையும். இந்த உலகில் நீங்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் உங்களுக்கான பயிற்சிகள் என்பதையும் புரிந்துக் கொள்ளுங்கள். ஆன்மாக்களின் உண்மையான வீடு என்று ஒன்று உண்டு. அங்கு திரும்பிச் செல்வதே ஆன்மாக்களின் நோக்கம். ஒவ்வொருவர் மனதிலும் ஒரு ஏக்கம், ஒரு தேடுதல் இருக்கும். அதை இந்தப் பூமியில் அல்லது வழிபாட்டுத் தளங்களில் காண முடியாது. உங்களுக்குள் தான் அதைக் காண முடியும். வீடு பற்றிய தேடுதல் தான் அது. அதனால்தான் இந்த உலகையே காலடியில் வைத்தாலும் மனிதனின் மனதைத் திருப்தி படுத்த முடியாது. காரணம் மனம் தேடுவது சுதந்திரத்தை, ஆன்மா விடுதலையை.
Leave feedback about this