வாழ்க்கை

அனைவரும் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்வதில்லை

Athletes Running on Track and Field Oval in Grayscale Photography

அனைவரும் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்வதில்லை. இந்த உலகில், குறிப்பாக இந்தச் சமுதாய அமைப்பில் அனைவரும் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்வது அறவே சாத்தியமற்றதாக ஆகிவிட்டது. அனைத்து இன மக்களுக்கும் ஒரே மாதிரியான வாய்ப்பும் வசதியும் வழங்கப்படுவதில்லை. மக்கள் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைக் கொண்டே தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். கல்வி, அறிவு, செல்வம், மரியாதை, வாய்ப்பு, என அனைத்தும் ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடுகின்றன.

ஒரு நாய்க்கு உணவு, இருப்பிடம், வாகனம், என அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கக் கூடிய மனிதர்கள் இருக்கக்கூடிய இந்த உலகில், அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாத இலட்சக்கணக்கான மனிதர்கள் இருக்கிறார்கள். பிறப்பு முதல் இறப்பு வரையில் இருப்பிடம் இல்லாமல் தெருவோரங்களில் வசிக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள். நம்மை சுற்றி வாழும் மற்ற மனிதர்களை விடவும் சற்று மேற்பட்ட வாழ்க்கை நமக்கு அமைந்துவிட்டது என்ற ஒரே காரணத்துக்காக தன் சக மனிதனை அவமானப்படுத்தவோ வேதனைப் படுத்தவோ எந்த ஒரு மனிதனுக்கும் உரிமை கிடையாது.

இந்த உலகில் மனிதர்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய பாவங்களில் ஒன்று மற்றவர்களின் மனதை வேதனைப் படுத்துவது. “தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே, நாவினால் சுட்ட வடு” என்று திருவள்ளுவப் பெருந்தகை கூறியதற்கு இணங்க ஒரு மனிதனின் மனதை வேதனைப் படுத்துவது மிகப்பெரிய பாவமாகும்.

நம்முடன் வேலை செய்பவர்கள், நமக்குக் கீழ் வேலை செய்பவர்கள், நம் வீட்டில் வேலை செய்பவர்கள் என அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். அவ்வளவு ஏன் பிச்சை எடுப்பவரைக் கூட பிச்சைக்காரன் என்று ஏளனமாகப் பேசக்கூடாது. கொடுக்கும் மனமும் வசதியும் இருந்தால் நிச்சயம் கொடுக்கலாம், இல்லையென்றால் அமைதியாகச் சென்று விட வேண்டும். பிச்சை கொடுக்கும் பொழுது கூட மனமுவந்து மகிழ்ச்சியாகக் கொடுக்க வேண்டுமே ஒழிய வேண்டா வெறுப்பாக முகத்தைக் கடுகடுவென வைத்துக்கொண்டு கொடுக்கக் கூடாது. வேண்டா வெறுப்பாக கொடுப்பதைவிடவும் கொடுக்காமல் இருப்பது நலம்.

கூலித் தொழிலாளி, சாக்கடையைச் சுத்தம் செய்பவர், மலத்தொட்டியைச் சுத்தம் செய்பவர், ரோடு போடுபவர், விவசாயம் செய்பவர், கட்டிடம் கட்டுபவர், ஆட்டோ ஓட்டுபவர், வியாபாரி, தொழிலதிபர், பொறியியலாளர், மருத்துவர், ஆசிரியர், என அனைத்துத் தொழில் செய்யும் மனிதர்களும் இன்னும் சொல்லப்போனால் எல்லா உயிர்களும் இந்த உலகில் சமமானவையே. செய்யும் தொழில் ஏற்ற தாழ்வு இருக்கலாம் ஆனால் அந்த தொழிலைச் செய்யும் மனிதர்களிடம் பேதம் பார்க்கக் கூடாது. இந்தச் சமுதாய அமைப்பில் எந்த ஒரு தொழில் செய்யும் மனிதர்களைக் கழித்தாலும் சமுதாய வாழ்க்கை சீராக இருக்காது.

மனிதர்களின் பிறப்பும், இறப்பும், வாழ்க்கையும், அவர்களின் கர்ம விதிகளின்படி நடப்பதனால் இன்னாருக்கு இந்த மாதிரியான வாழ்க்கைதான் அமையும் என்று யாராலும் கணித்துவிட முடியாது. விதிவசத்தால் சிலருக்கு நல்ல வாழ்க்கையும், சிலருக்கு சற்று குறைவான வாழ்க்கை வசதிகளும் அமையலாம். இதைப் புரிந்துகொண்டு அனைத்து மனிதர்களையும் சமமாக நடத்த வேண்டுமே ஒழிய, யாரையும் அவரின் செல்வத்துக்காகவும், தொழிலுக்காகவும், பிறப்புக்காகவும், ஜாதிக்காகவும், உயர்வாகவோ, தாழ்வாகவோ நடத்துவது மிகவும் கீழ்த்தரமான செயலாகும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X