ஆன்மீகம்

அல்லாஹ் முனாஜாத் – இஸ்லாமிய பிரார்த்தனை

black and brown beaded necklace

அல்லாஹ் முனாஜாத் – இஸ்லாமிய பிரார்த்தனை

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்!
அல்லாஹ் முனாஜாத்

இப்பாடல்களை பக்தியோடு அனுதினமும் காலை மாலை ஓதி வந்தால் இன்றைய விஞ்ஞான உலகத்தின் மருந்துகளால் நலமாகாத மாபெரும் பிணிகள் கூட எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் தீரும்.

முன்னுரை
முகவை மாவட்டம் கருணை வள்ளல் அன்பர் சீதக்காதி பிறந்து சீர்மிகும் சீராவை உதயமாக்கித் தந்த கீர்த்தி சேர் கீழக்கரை தந்த பேரின்பத்துடன் அருள் ஞானக்கடல், என்றெல்லாம் போற்றக்கூடிய, புகழக் கூடிய, மாண்புமிகு அல்லமா ஆரிபு பில்லாஹ் பல்லாக்கு ஒளியுல்லஹ் அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய 25 பாடல்கள், இந்த 25 பாடல்களையும் 25 நன் முத்துக்கள் என்றே சொல்ல வேண்டும்!

இது அனுபவத்தால் கண்ட உண்மை மேலும் காலரா, துன்பம் சேர் காலத்திலும் மிக அனுகூலத்தைத் தரும்.

பாடல் 1
அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்வே
அடியாரை காக்கும் அல்லாஹ்வே
எல்லாம் வல்ல அல்லாஹ்வே
எங்களை காக்கும் அல்லாஹ்வே
சல்லல் லாநபி பொருட்டாலுஞ்
சங்கடம் போக்கும் அல்லாஹ்வே
இல்லல்லாஹ் வெனூம் அல்லஹ்வே
ஏழை எங்களை காப்பாயே!

பாடல் 2
அவ்வ லோனே ஆகிரோனே
அடிமுடி வொன்று மில்லானே
எவ்வுயி ருக்கு மிரணமெலாம்
ஏழுகடல் வானம் பூமியெலாம்
ஒவ்வும் படியா யமைத்துவைத்து
உவப்புடன் எவ்வுயிர்க் கெல்லாமும்
செவ்வையா யுதவி யீபவனே
சிறப்பாய் எங்களைக் காப்பாயே!

பாடல் 3
அன்னையும் தந்தையும் நீதானே
ஆளும் ராஜனு நீதானே
என்ன பிழைகள் செய்தாலும்
எதையும் பொறுப்பவன் நீதானே
நின்னய மான ஆயுட்களை
நீடிப் பவனு நீதானே
பின்ன மான பலாய்க ளெல்லாம்
பிரிய வாருள்செய் றஹ்மானே!

பாடல் 4
தொற்று நோயுத் தொடர்நோயுந்
திடீரெனக் கொல்லு முபாநோயே
சித்தம் பதறு மிந்நோயைச்
சிறிதுமூரில் நில்லாமல்
பற்றி யடித்துத் துரத்திடுவாய்ப்
பரனே எங்களைக் காப்போனே
கர்த்தா இகபரம் படைத்தோனே
காப்பாய் எங்கள் றஹ்மானே!!

பாடல் 5
ஆத நபிகள் பொருட்டாலும்
அதன்பின் நபிகள் பொருட்டாலும்
நீதிநம் பிராட்டிகள் பொருட்டாலும்
நான்குயர் சஹாபாக்கள் பொருட்டாலும்
வேத மொழிப்படி நடந்தொழுகும்
வலிமார் குத்புகள் பொருட்டாலும்
சீத நோய்கள் பலாய்களெல்லாம்
தீர்ப்பாய் எங்கள் றஹ்மானே!

பாடல் 6
உலகின் முஃமின்கள் பொருட்டாலும்
உண்மை முஸ்லிம்கள் பொருட்டாலும்
நலமுறுந் தவத்தோர் பொருட்டாலும்
நல்லடி யார்கள் பொருட்டாலும்
பலமுறும் கொடையாளர் பொருட்டாலும்
பசித்தோருக் களித்தோர் பொருட்டாலும்
தலமீ துறும் பலாய்க ளெலாந்
தடைசெய் தருள்வாய் ரஹ்மானே!

பாடல் 7
கண்ணை யிமைபோற் காப்பவன்நீ
கல்லினுட் டேரையைக் காத்தவன்நீ
எண்ணறு நாம முள்ளவன்நீ
ஏகமு நிறைஸம தானவன்நீ
பெண்ணா ணெனவகை படைத்தவன்நீ
பெரும்பெரும் ஆலங்கள் வகுத்தவன்நீ
மண்ணினில் வந்தவு பாநோயை
மறைத்தொழிந் திடச்செய் ரஹ்மானே

பாடல் 8
நேர்வழி புறுக்கான் தந்தவன்நீ
நின்னடி யார்களைக் காப்பவன்நீ
பேர்பெருஞ் செல்வந் தருபவன்நீ
பிரியமா யெங்களைக் காப்பவன்நீ
கூர்மை யறிவுக டருபவன்நீ
குறைவற வுஜீவனந் தருபவன்நீ
ஊரினில் வந்தப லாய்கள்ளெலாம்
ஓட்டி யழித்திடு றஹ்மானே!

பாடல் 9
அற்பமாங் கெர்ப்பக் குவளறையில்
அன்புட னெங்களைக் காத்தவன்நீ
உற்பத் தீரைந்து மாதங்களில்
உறுப்புட னுலகினில் விட்டவன்நீ
நற்சுக மாய்த்தவழ்ந் தெழுந்திருந்து
நடக்கவு மிருக்கவும் வைத்தவன்நீ
துர்க்குண முளநோ யெங்களிடந்
தொடரா தருள்செய் ரஹ்மானே!

பாடல் 10
ஆறா யிரத்தி யறுநூற்றி
யறுபத் தாறு ஆயத்தினில்
சூறா நூற்றிப் பதினான்கில்
சொல்லு மேவல் விலக்கல்களை
கூறி முடித்திற சூல்மூலம்
குபிர்கள் விலகச் செய்தவன்நீ
தேறு மிவ்வே தம்பொருட்டால்
தீர்ப்பாய் குறைகள் றஹ்மானே!

பாடல் 11
வாதம் பித்தம் சிலேத்மங்களில்
வகைவகை யாய்வரும் பெருநோய்கள்
பேத முறும்பெரும் பைத்தியங்கள்
பிசகுறுங் காசங் கன்னோசை
தீதுறும் வாத மென்பதுவுந்
தீராய் பக்க வாதங்களும்
ஏதும் வாரா தெங்களுக்கு
இரங்கிக் காப்பாய் றஹ்மானே!

பாடல் 12
ஜுரங்கள் ஜன்னிகள் சூதகநோய்த்
துன்பஞ் செய்யும் பெரும்பாடு
முரண்கள் செய்யும் மூலநோய்
முகங்கால் வீங்கும் பாண்டுநோய்
சிரநோ யான பித்தநோய்
சிரமஞ் செய்யும் நீரிழிவு
பிறவு நோய்க ளணுகாமற்
பேணிக் காத்தருள் றஹ்மானே!

பாடல் 13
கொம்பம் படுவன் அக்ரமெனுங்
கொடிய வாந்தி பேதிநோய்
வெம்பும் வெள்ளை வெட்டைநோய்
வெறுப்புறு மம்மை வைசூரி
அம்புவிக் காகா பிளேக்நோயும்
ஆறாக் குஷ்டப் பதினெண்ணோய்
துன்பஞ் செய்யும் பலநோயுந்
தொடரா தருள்செய் றஹ்மானே!

பாடல் 14
கண்ட நோயுங் கண்ணோயுங்
கர்ப்பா சயத்தில் வருநோயும்
அண்ட நோயு மபநோயும்
அஷ்ட குன்மங் கொடுவாய்வும்
தண்ட நோயுந் தடைநோயுந்
தடிக்கா லானைக் கால்நோயும்
சண்டி நோயும் வாராமல்
தயவாய்க் காத்தருள் றஹ்மானே!

பாடல் 15
கண்ணோய் தொன்னூற் றாறுவகை
கடின மான மண்டைநோய்
பெண்ணாண் மலடு பேர்வருத்தம்
பிடுங்கிப் பிழியும் வயிற்றுவலி
உண்ணா திருக்கு மோங்காரம்
உருட்டுப் புரட்டு சதிவிக்கல்
ஹண்ணா சால்வரும் நோய்களெலாங்
காணா தருள்செய் றஹ்மானே!

பாடல் 16
பில்லி சூனியம் மனப்பேதம்
பிரிந்திடச் செய்யும் முகமாற்று
கொல்ல நினைத்துச் செய்சூது
குரளி யேவல் மாரணங்கள்
வெல்லுங் கன்மஞ் சாபங்கள்
விதியி னால்வருந் துன்பங்கள்
பொல்லா வறுமை நோய்களையும்
நில்லா தருள்செய் றஹ்மானே!

பாடல் 17
துற்குண முளஜின் ஷைத்தான்கள்
தேவதை மற்றும் பிசாசினங்கள்
பற்பல வான குபாடங்கள்
பகைஞரி னால்வரு மிடையூறு
அற்பர் களின்சக வாசங்கள்
அறநெறி தவறுந் துவேஷங்கள்
தப்பித முளபெருந் தங்கடமுந்
தளர்த்தி யருள்வாய் றஹ்மானே!

பாடல் 18
ஆங்கா ரமுடன் வருநோயும்
அவுஷ தமில்லா மாநோயும்
ஏங்கித் திணறும் மரண்நோய்
ஈழை யிளைப்பு நீரடைப்பு
நான்கா யிரத்தி நானூற்றி
நாற்பத் தெட்டு நோய்களையும்
நாங்கள் காணா தோடிடச்செய்
நல்வழி காட்டும் றஹ்மானே!

பாடல் 19
திருடர் தனிவழி யாபத்துந்
தீயி னால்வருந் தங்கடங்கள்
மிருகங் களினா லாபத்தும்
மிடிமையி னால்வரும் முஸீபத்தும்
அரவங் கடிவிஷம் மருவிஷங்கள்
ரணங்கள் கட்டிகள் பிளவைகளும்
திருஷ்டிகள் யாவும் அணுகாமல்
தயவாய் காத்தருள் றஹ்மானே!

பாடல் 20
பயிர்கள் தாவர வர்க்கங்கள்
பலந்தரும் மரங்கொடி பச்சைகள்
உயிர்கள் யாவுஞ் சேமமதாய்
ஓங்கி வளர்ந்திட வுன்னருளால்
தைரி யந்திட தேகமுற
இன்றுனை நாங்கள் வணங்கிடவே
ஹைராய் மழையைப் பொழிந்தருள்வாய்க்
கருணை கடலே றஹ்மானே!

பாடல் 21
நெல்நவ தானிய நிலைகொண்டு
நிகரில் லாமல் விளையுண்டு
பல்நக ரெல்லாஞ் செழிப்புண்டு
பசியெனுஞ் சொல்லெல் லாமாண்டு
அல்வழி யென்னுந் துயரகன்று
அனுதின முன்னைத் துதிகொண்டு
நல்நிலை பெறவர மீந்தருள்வாய்
நலமார் எங்கள் றஹ்மானே!

பாடல் 22
நெஞ்சம தால்வரும் பாவங்கள்
நேர்வழி தவறிய பாவங்கள்
வஞ்சினை யாயுறும் பாவங்கள்
வாய்கரங் கால்செய் பாவங்கள்
சஞ்சல முறும்பெரும் பாவங்கள்
ஷறஹினை யிழந்த பாவங்கள்
மிஞ்சிடுஞ் சிறிய பாவங்கள்
முழுவதும் போக்கிடு ரஹ்மானே!

பாடல் 23
குருமொழி கொள்ளாப் பாவங்கள்
குறைபல செய்த பாவங்கள்
அருள்வழி செல்லாப் பாவங்கள்
அன்னையர் நொந்த பாவங்கள்
நிருமொழி தள்ளிய பாவங்கள்
தந்தையர் நொந்த பாவங்கள்
கருவினில் அமைந்த பாவங்கள்
எல்லாம் போக்கிடு றஹ்மானே!

பாடல் 24
வறுமை பஞ்சம் ஊழ்வினையும்
வகையறு நாசந் தப்பிதங்கள்
சிறுமை சின்னஞ் செய்பிழையுஞ்
சிலபல ரகசிய பாவங்கள்
மறுமை நினையாப் பாவங்கள்
மடைமை மாசுறு மெண்ணங்கள்
நிறைந்த பாவமடங்கலையும்
நிவர்த்தி யருள்வாய் றஹ்மானே!

பாடல் 25
“பல்லாக் குத்தம்பி” யெனும்மிஸ்கீன்
பகர்ந்த அல்லாஹ் முனாஜாத்தால்
பொல்லாத் துன்பந் துயரகலப்
பேணும் நல்வழி யும்சேர
எல்லா முஸ்லிம் ஆண்பெண்கள்
இதய மகிழ்ந்து ஓதிவர
அல்லாஹ் வல்ல பெரியவனே
அருள்வாய் ஆமின் றஹ்மானே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X