“ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்” என்பது நாம் தினசரி பேச்சு வழக்கில் பயன்படுத்தும் பழமொழியாகும். “ஐந்து பெற்றால்” என்ற சொல்லுக்கு ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்றால் என்று பலரும் பொருள் கொள்கிறார்கள். அரசனைப் போன்று சகல வசதிகளுடன் வாழ்பவனும், ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்றால் திருவோடு ஏந்திய ஆண்டியைப் போன்று ஆகிவிடுவான் என்று எண்ணுகிறார்கள்.
அந்த காலத்தில் பெண் பிள்ளைகளுக்கு சீர்வரிசை செய்து, வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைப்பதற்கு அதிக செலவாகும் என்பதால் இந்த சிந்தனை தோன்றி இருக்கும். ஒரு பெண் பிள்ளையை திருமணம் செய்து கொடுப்பதற்கே பல லட்சம் செலவாகும் போது ஐந்து பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றால் ஒரு தந்தையின் நிலை என்னவாகும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த பழமொழி மருவி இருக்கும்.
உண்மையில் இந்த பழமொழியில் வரும் “ஐந்து பெற்றால்” என்ற சொற்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையை சீரழிக்கக் கூடிய ஐந்து வகையான மனிதர்களைக் குறிக்கிறது.
- ஆடம்பரமாக வாழும் தாய்
- பொறுப்பில்லாத தந்தை
- ஒழுக்கம் இல்லாத மனைவி
- உண்மையும் அன்பும் இல்லாத உடன் பிறந்தோர்
- பெற்றோரின் சொல்லுக்கு அடங்காத பிள்ளைகள்
இவை ஐந்தும் ஒரு மனிதனின் வாழ்வில் அமையும் என்றால் அரசனைப் போன்று பெயரும் புகழும் செல்வமும் நிறைந்த வாழ்க்கை அமைந்திருந்தால் கூட அவன் தன் வாழ்க்கையை வெறுத்து ஒதுங்கிப் போவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று பொருளாகும். அல்லது இவை போன்ற ஐந்தும் ஒருவர் வாழ்க்கையில் அமைந்துவிட்டால் அந்த வாழ்க்கையை வாழ்வதைவிட அதைத் துறந்து ஆண்டியாகப் போவதே மேல் என்றும் பொருள் கொள்ளலாம்.