ஐம்பொறிகளும் மனப் பதிவுகளும். ஒரு விலங்கு எழுப்பும் ஓசையைக் கொண்டு அந்த விலங்கை அடையாளம் கண்டு கொள்கிறோம். ஒரு விலங்கின் உருவத்தைப் பார்த்தால் அது எழுப்பக்கூடிய ஓசை நினைவுக்கு வருகிறது. ஒரு மலரைப் பார்த்தால் அதன் வாசனை நினைவுக்கு வருகிறது. வாசனையை முகர்ந்தால் அந்த மலரின் உருவ அமைப்பு நினைவுக்கு வருகிறது.
கண்களைக் கட்டிக்கொண்டு ஒரு பொருளைத் தொட்டாலும் அது இந்தப் பொருள் தான் என்பதை நம்மால் கூறிவிட முடிகிறது. கண்களால் காணாவிட்டாலும் வாசனையையோ, சுவையையோ, சப்தத்தையோ, தொடும் உணர்வையோ, கொண்டு; உணவு, பழம், விலங்கு, வாகனம், பொருள், நிகழ்வு, நபர், என அனைத்தையும் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.
இவற்றுக்குக் காரணம் மனதில் உருவாகும் பதிவுகளின் தன்மை. மனதில் உருவாகும் ஒவ்வொரு பதிவும், ஒளி, ஒலி, வாசனை, உணர்வு, சுவை என அனைத்தும் கலந்த ஒரு முழுமையான பதிவாகவே உருவாகிறது. அதனால் அந்த பதிவில் இருந்து ஏதாவது ஒரு பகுதியை உணர முடிந்தால் போதும், மற்ற பகுதிகளைத் தானே யூகித்துக் கொண்டு அது இன்ன உணவு, பழம், விலங்கு, வாகனம், பொருள், நிகழ்வு, நபர், என்று நம் அறிவுக்கு மனம் நினைவு படுத்துகிறது.