ஆதி காலத்து தமிழக மனிதர்கள். அடர்ந்து செழித்த மலைத்தொடர், அதற்கு அலங்காரமாக வானை எட்டிப் பிடிக்கும் மரங்கள். அந்த மலைத் தொடரின் ஓரத்தில் பல்வகையான விலங்குகள் கூடி வாழும் அமைதியான காடு. அதன் கரையில் காட்டு விலங்குகளுடன் மனிதர்கள் பங்கிட்டுக் கொள்ளும் மெல்லிய சலசலப்புடன் நகரும் நதி. அவற்றின் நடுவில் பச்சை பசேலென படர்ந்த புல்வெளி. அந்த நதிக்கும் காட்டுக்கும் இடைப்பட்ட புல்வெளியில் ஒரு மனித குடியிருப்பு.
இந்த ரம்மியமான சூழ்நிலையில், தாவரங்களும் விலங்குகளும் மனிதர்களும் தங்களுக்குள் எந்த பேதமுமின்றி அன்பாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். போட்டி பொறாமை பேராசை இல்லாத மனிதர்கள், பறவைகளைப் போன்று நாளையைப் பற்றிய பேராசையும் அச்சமும் இன்றி அமைதியாக வாழ்ந்தார்கள்.
அழகிய பகல் பொழுது, வானில் தவழும் மேகங்கள் மரங்களின் கூந்தலை அன்பாக தடவிக் கொண்டே சென்றன. கள்ளம், கபடம், அச்சமின்றி, ஓடி ஆடி விளையாடும் சிறுவர்கள். அவர்கள் விளையாடுவதை அமைதியாக ரசிக்கும் மூத்தவர்கள். அந்த குழந்தைகளின் முகங்களும் பெரியவர்களின் முகங்களும் அமைதியில் தெய்வத்தின் நிலையை ஒத்திருந்தன. அமைதியாக ஓய்வாக இயற்கையை ரசித்துக் கொண்டு சிலரும், கூட்டமாகச் சேர்ந்து பேசி சிரித்துக் கொண்டு சிலரும் தங்களின் பொழுதை இன்பமாக போக்கிக் கொண்டிருந்தார்கள்.
கூட்டத்தின் சில மனிதர்கள் அந்த ஆற்றிலிருந்து நீரைச் சேமித்துக் கொண்டு திரும்பினார்கள். மான்களும், யானைகளும், புலிகளும், பறவைகளும் மனிதர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றன. அந்த மனித கூட்டத்தின் ஒட்டு மொத்த உணவு தேவைக்காக தேனும், பழங்களும், காய்கறிகளும் சேகரித்துக்கொண்டு சில ஆண்கள் திரும்பிக் கொண்டிருந்தார்கள், அவர்களுக்குத் துணையாக சில பெண்கள் உடன் நடந்தார்கள்.
மாலை நேரம், சூரியன் ஓய்வெடுக்க எண்ணினான். அந்த சிறு கூட்டத்து மனிதர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி தங்களின் பசியை ருசியுடன் மாற்றிக்கொண்டு. ஒன்றாக அமைதியாக ஆடியும் பாடியும், பேசி சிரித்தும், வாழக்கையை அனுபவம் செய்தார்கள். இரவு நெருங்கியதும் காலை முதல் தங்களுக்கு வழங்கிய வாழ்க்கை அனுபவங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்தி தங்களின் குடில்களுக்குத் திரும்பினார்கள்.
அவர்கள், அழகிய அனுபவங்களுடனும் கனவுகளுடனும் இரவை கழித்து, ஓய்வில் இருந்தார்கள். காலை சூரியன் வணக்கம் கூறியதும் மீண்டும் தங்களின் மனித வாழ்க்கை அனுபவத்துக்குள் நுழைந்தார்கள். அந்த அமைதியான இன்ப அனுபவங்களால் நாட்கள் நிமிடங்களாகக் கழிந்து கொண்டிருந்தன.
மேலே குறிப்பிடப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை, இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மனிதர்களின் வாழ்க்கை எவ்வாறு இருந்திருக்கும் என்பதற்கான கற்பனை.
Leave feedback about this