ஆன்மீகம்

உண்மையில் ஆன்மீகம் என்றால் என்ன?

உண்மையில் ஆன்மீகம் என்றால் என்ன? ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் பலவகையான ஆசைகள், தேடுதல்கள் இருக்கும். அவன் வாழ்க்கையின் லட்சியமாக எவற்றை எண்ணுகிறானோ அவற்றை அடையத் துடிப்பான், அவற்றை அடைந்த பின்னர் புதிய தேவைகளை உருவாக்குவான். அவற்றையும் அடைந்துவிட்டால் மீண்டும் புதிய ஆசைகள் உருவாகும். மனிதர்களின் ஆசைகளுக்கும், தேவைகளுக்கும் முடிவே இருக்காது. மனிதர்கள் ஆசைகளின் பின்னாலும் கற்பனைகளின் பின்னாலும் ஓடிக்கொண்டே இருப்பார்கள்.

மனித வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு; தான் தேடிய எதுவுமே உண்மையில்லை, தான் தேடிய அனைத்துமே அழியக்கூடியவை என்று மனிதர்கள் உணரும் தருணத்தில்; மரணம் அவர்களை நெருங்கிவிடுகிறது. இறுதிவரையில் மனிதப் பிறப்பின் நோக்கம் அறியாமலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள்.

ஏன் பிறந்தோம்? ஏன் மனிதனாக பிறந்தோம்? ஏன் வாழ்கிறோம்? ஏன் மரணிக்கிறோம்? மரணத்துக்குப் பிறகு எங்கே செல்கிறோம்? மரணத்துக்குப் பின்பாக என்ன நடக்கும்? இவ்வாறான எந்த கேள்விக்கும் விடை தெரியாமல், அறியாமல் அலைந்துக் கொண்டிருக்கும் மனிதர்களை நெறிப்படுத்த உருவானதே ஆன்மீகம். மனித அறிவுக்கு எட்டாத விசயங்களுக்கும், மனிதனுக்கு உருவாகும் சூட்சமத்தை பற்றிய கேள்விகளுக்கும் விடைக்கான வழி சொல்வதுதான் ஆன்மீகம்.

ஆன்மீகம் என்பது ஒரு மதம் சார்ந்த விசயமல்ல. மதத்தில் ஆன்மீகம் உண்டு, ஆனால் ஆன்மீகத்தில் மதமில்லை. தன்னை, தன் சுயத்தை அறியும் வழிமுறையே ஆன்மீகம். ஆன்மீகத்தை நம் முன்னோர்கள், மனிதர்களின் பக்குவ நிலைகளுக்கு ஏற்ப நான்கு நிலைகளாகப் பிரித்தார்கள். பக்தி, கர்மம், கிரியை, ஞானம், என்று நன்கு வழிமுறைகள் உண்டு. இவற்றில் உயர்வு தாழ்வு என்று பிரிவினைகள் கிடையாது, ஒன்றாவது இரண்டாவது என்ற படிநிலையும் கிடையாது, மனிதர்களின் மனநிலைக்கு ஏற்ப அவர்களுக்கு உகந்த பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இந்த உலகத்தில் எதைப் பற்றிக் கேட்டாலும் மனிதர்களுக்குத் தெரியும், கணினி, அறிவியல், பூலோகம், மருத்துவம், கணிதம் என எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள், ஆனால் மனிதன் என்பவன் யார் என்பது மட்டும் மனிதர்களுக்குத் தெரியாது. அதைத் தேடி அடையத் துணிவில்லாமல், அடுத்தவர்களின் அனுபவங்களையும், கட்டுக் கதைகளையும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இதில் வேடிக்கையான விசயம் என்னவென்றால், தான் யார் என்பதையே அறியாத மனிதர்கள்; தங்களின் குழந்தைகளுக்கு தங்களின் அறியாமையைப் புகுத்துகிறார்கள். அவர்கள் எவற்றை உண்மை என்று நம்புகிறார்களோ அவற்றை தங்களின் குழந்தைகளுக்கும் புகட்டுகிறார்கள். அதனால் அந்த குழந்தைகளும் அறியாமையுடன் வளர்க்கிறார்கள். நாமும் அந்த செயலைப் பின்பற்றாமல் நம் பிள்ளைகளுக்கு சிந்திக்கவும் கேள்விகள் கேட்கவும் கற்றுத்தர வேண்டும். சிந்திக்க கேள்விகள் கேட்க தூண்ட வேண்டும். தன்னை பற்றிய உண்மைகளை தன் சுய அறிவைக் கொண்டு அறிவது மட்டுமே ஆன்மீகமாகும்.

Reiki Master, Healer, Acupuncturist, Writer, Thinker, Speaker, Author.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X