11 ரூபாய்க்காக ஏவப்பட்ட ஏவல். ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்பு 1984 ஆம் ஆண்டு, அறந்தாங்கி அருகே எங்கள் கிராமத்தில் நடந்த சம்பவம் இது. எனது தந்தையின் தாயார் – எனது பாட்டி திடீரென நோய்வாய்ப்பட்டு இருக்கிறார், எந்த மருத்துவம் செய்தும் குணமாகவில்லை. ஒரு சில காலத்திலேயே படுத்த படுக்கையானார்.
அவரின் ஆரோக்கியம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருந்தது, அவர் உடல் உணவை ஏற்கவில்லை. ஒரு சில நாட்களிலேயே அவர் இறந்துவிடுவார் என்று மருத்துவர் கூறிவிட்டார். படுக்கையில் கிடந்த அவர் தனது வாழ்நாளை எண்ணிக் கொண்டிருந்தார்.
அந்த சூழ்நிலையில் ஒரு நாள் ஒரு பட்டுநூல்காரர் எங்கள் வீட்டு வாசலுக்கு வந்துள்ளார். எங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டு அவர் உடுக்கை அடித்து ஏதோ பாடிக் கொண்டிருக்கிறார். அவர் உடுக்கை அடித்து கொண்டிருந்த ஒரு சில நிமிடங்களில் படுத்த படுக்கையாக சுயநினைவு இன்றி கிடந்த எனது பாட்டி ஆக்ரோஷமாக கத்திக் கொண்டு எழுந்து பட்டுநூல்காரரை நோக்கி ஓடி வந்துள்ளார்.
அவர் ஆக்ரோஷமாக ஓடி வருவதைக் கண்ட பட்டுநூல்காரர் அங்கிருந்து ஓடி இருக்கிறார். எனது பாட்டி கத்திக்கொண்டு துரத்துவதையும் பட்டுநூல்காரர் ஓடுவதையும் கண்ட எனது தந்தையார் அந்த பட்டுநூல்காரரை துரத்திக் கொண்டு சென்றுள்ளார். ஊர் எல்லையில் பட்டுநூல் காரரை எனது தந்தை பிடித்து விசாரித்துள்ளார்.
என்ன நடந்தது எதனால் ஓடுகிறீர்கள் என்று விசாரித்த போது அவர் கூறியுள்ளார் “என் பாட்டியின் உடலில் ஒரு ரத்த காட்டேரி இருக்கிறது அந்த காட்டேரி தான் பட்டுநூல்க்காரரின் குடுகுடுப்பை ஒளியையும் அவர் பாடிய ஓசையையும் கேட்டு அவரை துரத்தி இருக்கிறது”.
அதற்கு என் தந்தை “உங்களால் என் தாயின் உடலில் இருக்கும் ரத்தக்காட்டேரியை விரட்ட முடியுமா” என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த பட்டுநூல்காரர் “உங்கள் தாயின் உடலின் உள்ளே இருப்பது இரத்தக்காட்டேறி, அதை நான் விரட்ட முயன்றால் அது என்னைக் கொன்றுவிடும் அல்லது உங்கள் தாயார் இறந்துவிடுவார்” என்னால் முடியாது என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் நடந்த பிறகு வீட்டில் உள்ள உறுப்பினர்கள் இதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போதுதான் ஒருவர் ஒரு முக்கியமான விசயத்தைப்பற்றி கூறியிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு எங்கள் வீட்டில் சார்பாக ஒரு நீதிமன்ற வழக்கு நடந்திருக்கிறது அந்த வழக்கில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆவுடையார் கோயிலில் உள்ள ஒரு கோவில் பூசாரியிடம் மந்திருந்திருக்கிறார்கள்.
இப்போது எனது பாட்டியின் தொந்தரவுக்காக மீண்டும் அந்த கோயிலுக்குச் சென்று அந்த பூசாரியிடம் விசாரித்து இருக்கிறார்கள். அப்போதுதான் அந்த பூசாரி ஒரு உண்மையைக் கூறியிருக்கிறார். ஏற்கனவே எங்கள் பாட்டி அந்த பூசாரிக்கு காணிக்கை பணமாக 11 ரூபாய் கொடுக்க மறந்து விட்டாராம். அந்த பதினோரு ரூபாய் கொடுக்காத கோபத்தில் தான் அந்த பூசாரி இந்த காட்டேறியை என் பாட்டியின் மீது ஏவி விட்டிருக்கிறார்.
அந்த பூசாரியிடம் 11 ரூபாய் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார் என் தந்தை. வீட்டிற்கு வந்து சேரும்போது என் பாட்டி எந்த நோயும் வராததை போலும் எதுவும் நடக்காது போலும் சாதாரணமாகச் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். படுத்த படுக்கையாக மரணத்தை எதிர் நோக்கி காத்திருந்த பாட்டி சற்று நேரத்தில் சுறுசுறுப்பாக இயங்குவது அனைவரும் ஆச்சரியமாக பார்த்திருக்கிறார்கள். அந்த பாட்டி இப்போதும் உயிருடன் இருக்கிறார்.
Leave feedback about this