பொருளாதாரம்

சேமிப்பு பழக்கம்

சேமிப்பு பழக்கம். உங்களுக்கு எதைச் சாப்பிட விருப்பமாக இருக்கிறது என்று கேட்டால் நீங்கள் சாப்பிட்டுப் பழக்கப்பட்ட ஒரு உணவின் பெயரைச் சொல்வீர்கள். நீங்கள் எங்குச் செல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டால், நீங்கள் சென்று ரசித்த உங்களுக்கு பிடித்தமான ஒரு இடத்தின் பெயரைச் சொல்வீர்கள். காரணம், மனிதர்களுக்கு எதில் அனுபவம் இருக்கிறதோ அதில்தான் நாட்டம் அதிகமாக இருக்கும்.

ஒரே வகை உணவை அடிக்கடி உட்கொள்ளும் சிலரை நீங்கள் பார்த்திருக்கலாம், அவர்கள் எங்குச் சென்றாலும் ஒரே வகையான உணவையே மீண்டும் மீண்டும் உட்கொள்வார்கள், காரணம் அது அவர்களின் மனதில் பதிந்துவிட்ட பழக்கமாகும். இந்த உதாரணங்களைப் போன்று இளம் வயதிலேயே ஒரு பழக்கத்தை குழந்தைகளுக்கு உருவாக்கி விட்டால், அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பிறகும் அந்த பழக்கம் அவர்களுடன் தொடரும்.

இளம் வயதிலேயே பணத்தின் அருமையையும் முக்கியத்துவத்தையும் விரிவாகப் புரிய வைத்துவிட்டால், பெரியவர்கள் ஆனதும் குழந்தைகளுக்கு பணத்தின் மீது அதிக ஆர்வம் உண்டாகும். பணத்தைப் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்வதற்கான முதல் வேலையாக அவர்களின் கைகளில் பணத்தைக் கொடுத்து செலவு செய்யுங்கள், பொருட்கள் வாங்கும் பொழுது அவர்களை பணம் செலுத்தச் சொல்லுங்கள். யாருக்காவது பணம் கொடுக்க வேண்டியது இருந்தால் அவர்களின் கைகளில் கொடுத்து கொடுக்கச் சொல்லுங்கள்.

இவ்வாறு இளம் வயதிலேயே பணத்தைப் பயன்படுத்த அவர்களை ஊக்குவியுங்கள். அவர்களுக்குச் சேமிப்பு பழக்கத்தை உருவாக்குவதற்காக, இளம் வயதிலேயே ஒரு உண்டியலைக் கொடுத்து தினம் ஒரு சிறிய தொகையைச் சேமித்து வரச் சொல்லுங்கள். பள்ளிக்கூடத்தில் இருந்து கொண்டுவரும் மீதி சில்லறையையும், பொருட்கள் வாங்கியது போக மீதம் இருக்கும் சில்லறையையும், அந்த உண்டியலில் சேமித்து வைக்கச் சொல்லுங்கள். அந்த உண்டியல் நிறைந்ததும் அதில் உள்ள பணத்தை வங்கியில் கணக்கு தொடங்கி சேமிக்க சொல்லுங்கள்.

நீங்கள் ஒவ்வொரு முறை வங்கிக்குச் செல்லும் போதும் உங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்லுங்கள். பணம் கொடுக்கும் வாங்கும் செயல்களை உங்கள் பிள்ளைகளைச் செய்யச் சொல்லுங்கள். உங்கள் பிள்ளைகள் ஏதாவது ஒரு பொருளை ஆசைப்பட்டுக் கேட்டால் அதனை நீங்கள் வாங்கிக் கொடுக்காதீர்கள். அதற்குரிய தொகையைச் சிறிது சிறிதாக அவர்களிடம் கொடுத்து சேர்த்து வைத்து அவர்களாக அந்த பொருளை பணம் செலுத்தி வாங்கிக் கொள்ளச் சொல்லுங்கள்.

இவ்வாறு மெல்ல மெல்ல பணத்தை அவர்களுக்கு அறிமுகம் செய்து பணத்தை பயன்படுத்தவும் சேமிக்கவும் பழகி விட்டால், பணத்தின் அருமை அவர்களுக்கு புரிந்துவிடும். இளம் வயதிலேயே நீங்கள் கற்றுத் தந்த இந்த பழக்கம் அவர்கள் பெரியவர்கள் ஆனதும் பணத்தை சரியாக கையாளவும் சேமிக்கவும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X